

உஷாதேவி
ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணன் மாண்ட பிறகு அவன் மனைவி மண்டோதரி கணவனின் பிரிவு தாளாமல் கதறுகிறாள். நல்ல குணவதியான மண்டோதரி, ஒரு மனைவி கணவனுக்கு எப்படியெல்லாம் இருக்கவேண்டுமோ அப்படியெல்லாம் வாழ்ந்தவள். காரியத்தில் வேலைக்காரியைப் போலவும்,
உபதேசத்தில் மந்திரியைப் போலவும், அலங்காரத்தில் மகாலஷ்மியைப் போலவும், பொறுமையில் பூமியைப் போலவும், பாசமாக கவனித்துக் கொள்வதில் அம்மாவைப் போலவும், படுக்கையில் தாதியைப் போலவும்,
திகழ்ந்தவள் மண்டோதரி.
ஆஞ்சநேயர் இலங்கையில் நுழைந்தபோது அரண்மனையில் இருந்த மண்டோதரியை சீதை என்று நினைத்துக்கொண்டார். தெய்விகம், சாந்தம், அமைதி ததும்பும் முகத்துடன் அம்சதூளிகை எனப்படும் மஞ்சத்தில் படுத்திருந்த மண்டோதரியைப் பார்த்து முதலில் குழம்பிய அவர், ராமபிரானைப் பிரிந்த அன்னை மஞ்சத்தில் உறக்கம் கொள்ளவே மாட்டாள் என்ற தெளிவுக்கு வந்தார்.
ராவணன் போருக்குக் கிளம்பும்போது, ராமன் சாதாரண மனிதன் அல்ல, அவன் பரமாத்மா என்று கூறி மண்டோதரி எச்சரித்தாள். ராவணன் இறந்த பிறகு அவன் உடலைக் கட்டிக்கொண்டு, “ராமன் தெய்வம் என்று கூறினேனே, நீங்கள் கேட்கவில்லையே சுவாமி” என்று அரற்றுகிறாள். ஒருவர் இறந்த பிறகும் அவரது ஆத்மா சிறிது நேரம் அங்கேயே சரீரத்தின் மீது அபிமானத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும்.
ஆத்மாவுக்கு கண் தெரியும்; காதும் கேட்கும். அப்படியான நிலையில், ராவணனின் ஆத்மா தான் புலம்புவதைக் கேட்டாவது ராமனை அடையட்டும் என்று எண்ணி ராமனின் புகழைப் பாடுகிறாள். “நீங்கள் இருந்து மேலும் பாவங்கள் செய்யா வண்ணம் அழித்து காத்தார் ராமர்” என்று உருகுகிறாள். இப்படி கணவனைப் பறிகொடுத்த நிலையிலும் கடவுளைச் சிந்தனை செய்யும் மண்டோதரியைப் போலத் தனக்குப் பக்குவம் வரவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com