Published : 10 Oct 2019 12:23 pm

Updated : 10 Oct 2019 12:24 pm

 

Published : 10 Oct 2019 12:23 PM
Last Updated : 10 Oct 2019 12:24 PM

தெய்வத்தின் குரல்: குரு தரும் சொத்து

the-property-of-the-guru

அப்பா வைத்துவிட்டுப் போகிற வீடு நாளானால் இடிந்து போகும். அதனால் அவ்வப்போது அதற்கு ரிப்பேர் பண்ணணும், வெள்ளையடிக்கணும், பெயின்ட் அடிக்கணும். அப்பா வைத்துவிட்டுப் போகிற நிலத்திலேயும் வருஷா வருஷம் முதல் போட்டு, விதை போட்டு உழைத்தே மகசூல் காணமுடியும். எத்தனை எருப் போட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக பூஸாரம் போய்விடுகிற நிலங்களும் உண்டு.

மழை பெய்யாமல் போவது, அணை திறக்காமலிருப்பது, பூச்சி, பொட்டு, ஒரேயடியாக மழை பெய்து அடித்துக் கொண்டுப் போகிறது, அழுகிப் போகிறது - இப்படிப் பல கஷ்டங்கள். எல்லாவற்றுக்கும் மேலே உச்சவரம்புச் சட்டம்! ரூபாயாக (சொத்து) வைத்துவிட்டுப் போனாலும் நாளுக்கு நாள் நாணய மதிப்பு குறைந்து போவது! பல தினுசு வரிகள். புதுசாக என்ன வரி வருமோ என்று ஓயாமால் பயம். திருட்டுப் போவது; எங்கே திருட்டுப் போய்விடுமோ என்று சதா பயம்.

இப்படியெல்லாம் எந்த விதமான சொத்தானாலும் அது சாசுவதமாயில்லாமல் க்ஷீணித்துப் போக இடமிருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சொத்தைப் பெறுகிற வாரிசின் மனசு கெட்டுப்போவது. சொத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளணும் என்பதற்காகப் பலவிதத்தில் தப்புகள் செய்வது; சட்டத்தை மீறிச் செய்வது; பிறத்தியாருக்கு நஷ்டம், கஷ்டம் உண்டாக்கியும் தங்களுக்கு லாபமாகப் பண்ணிக் கொள்ளப் பார்ப்பது; லஞ்சம் கொடுக்கிறது; பொய்க் கணக்கு காட்டி ஏமாற்றுகிறது; உச்சவரம்பு விதிகளுக்குப் பயந்து ‘பினாமி’ என்று பிறத்தியார் உடைமை மாதிரி பொய்யாகப் பிரித்துக் காட்டுவது; இன்னும் பல தினுஸான தகிடுதத்தம் செய்வது – இப்படியெல்லாம் தப்பு வழியிலே போய், சொத்து (சிறு முடிச்சு போலக் கையைக் காட்டி) இவ்வளவு என்றால், அதை முன்னிட்டு மூட்டை கட்டுகிற பாவம் இத்தனை பெரிசாகிறது!

காதறுந்த ஊசியும்

பூர்வபுண்யத்திலேயோ, ஏதோ அதிர்ஷ்டத்திலோ அப்பா சொத்து நன்றாகவே வளர்கிறது, தப்புப் பண்ணாமலே விருத்தியாகிறது என்றால்கூட, கடைசியில் ஒரு நாள் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று அத்தனைகளையும் விட்டுவிட்டுப் போக வேண்டியதாகவே ஆகிறது. அரண்மனை மாதிரி வீடாகட்டும், ஆயிரம் வேலி முப்போகம் விளைகிற நிலமாகட்டும், கோடி-பத்து கோடி என்று ரூபாயாகட்டும், எதுவானாலும் அதிலிருந்து துளிக்கூட நமக்குப் பிரயோஜனம் கிடைக்காதபடி அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு நாள் புறப்படும்படி ஆகிறது.

ஆக அப்பா சொத்து சாசுவதமில்லை. நாமே தேடிக் கொள்கிற சொத்துக்களுக்கும் இதே கதைதான். சாசுவதமான சொத்து, இழந்து போகாத, ரிப்பேர் பண்ண வேண்டாத சொத்து, வரியும் திருட்டும் தொடாத சொத்து, ‘திருட்டுப் போயிடுமோ?’ என்று பயப்படவும் வேண்டாத சொத்து, தப்பு வழிகளில் போய் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டாத சொத்து அப்பா கொடுக்க முடியாது; நாமாகவும் தேடிக்கொள்ள முடியாது.

சாசுவதமான சொத்து

குரு என்கிற ஒருத்தர்தான் சாசுவதமான அந்த சொத்தைத் தருகிறவர். இது நாம் போன பிற்பாடு நம் கூட வராத சொத்தில்லை – நம்மையே திரும்பி வரப் பண்ணாத சொத்து! எது சாசுவதமோ அந்தப் பரமாத்மாவுடன் நம்மைப் பிரிக்க முடியாமல் சேர்த்துவிடுகிற சொத்து.

ஞானம் என்ற சொத்தை குரு அநுக்ரஹிக்கிறார். சொத்து க்ஷீணித்துக் கொண்டே போவது, நாம் சிரமப்பட்டு அதை விருத்திபண்ணப் பாடுபடுவது, இந்தப்பாட்டில் பாவ மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கட்டிக்கொள்வது என்பதற்கெல்லாம் இடமே வைக்காமல் நாளுக்கு நாள் தானும் வளர்ந்து நம்மையும் வளர்ப்பது குரு தருகிற உபதேசச் சொத்து. மற்ற சொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா சுகங்களும் தாற்காலிகம்தான். ‘நித்யானந்தம்’ என்றே சொல்லப்படுவதான சாசுவத சுகத்தைத் தருவது குரு அனுக்கிரகம் செய்யும் ஞானமொன்றுதான்.

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தெய்வத்தின் குரல்குருசொத்துகாதறுந்த ஊசிசாசுவதமான சொத்துஞானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author