

தஞ்சாவூர்க் கவிராயர்
பொய்யிலிருந்து மெய்க்கு
இருளிலிருந்து ஒளிக்கு
சாவிலிருந்து சாகா நிலைக்கு
என்னை இட்டுச் செல்
- ரிக் வேதம்.
தனிப்பட்ட முறையில் தன்னிடம் ஏற்பட்ட சத்திய வேட்கை அல்லது எழுச்சியைச் சமூகத்தின் எழுச்சியாக வளர்த்தெடுத்ததில்தான் காந்தியின் வாழ்க்கை பூரணம் பெறுகிறது. காந்தியின் தேடல் கடவுளில் தொடங்கி, கடவுளே உண்மை என்ற நிலையைக் கடந்து உண்மையே கடவுள் என்பதாக உருமாற்றம் பெறுகிறது. காந்திஜி தன் அகவெளிப் பயணத்தில் கண்டடைந்தவற்றை வேறுயாரும் கண் மூடித்தனமாகப் பின்பற்றிடக் கூடாது என்று கவலை கொண்டார். ஆகவேதான் தன் சத்தியத் தேடலுக்கு ‘சத்திய சோதனை’ என்று பெயரிட்டார்.
ரூமியும் காந்தியும்
அமெரிக்கத் தத்துவவியலாளர் ஹென்றி டேவிட் தாரோவிடமிருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கான சாரத்தைப் பெற்றார். ஜான் ரஸ்கினிடமிருந்து உடல் உழைப்பு ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவும் என்பதைக் கற்றார். பாரசீகக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியிடமிருந்து அகிம்சையின் நோக்கத்தைத் தெளிகிறார். காந்தி தனது 26-ம் வயதில் ஸ்வான்டன் மொழிபெயர்த்த ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளைப் படித்தார். ‘உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே’ என்ற திருமூலர் வழியை ரூமியினுடையது ஞாபகப்படுத்துகிறது. ரூமியின் இந்த அம்சம்தான் காந்தியைக் கவர்ந்திருக்க வேண்டும்.
ஹிட்லரும், முசோலினியும் ரூமியின் கவிதைகளைப் படித்திருந்தால் இரண்டு உலக யுத்தங்களும் நடந்திருக்காது என்பார் காந்தி. பாபுஜியின் தினசரிப் பிரார்த்தனைகளில் ரூமியின் கவிதைகளும் இடம்பெறலாயின.
வீடு பேறுக்கான தயாரிப்பாக ஆன்மிக முயற்சியை காந்திஜி மேற்கொள்ளவில்லை. இவ்வுலக வாழ்க்கையிலேயே முழுமை அடைவதற்கான வழியைத் தேடவே விரும்பினார்.
எழுந்தது சர்வோதயம்
சர்வ மதங்களையும் இணைத்த ஒரு முழு மதப் பார்வையுடன் காந்தி முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் சமயப் பிரிவுகளைக் கடந்து சத்தியத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்து, முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்தவர் என்றெல்லாம் எண்ணாது எல்லோரும் இந்தியா என்ற கருத்தாக்கத்தை காந்திதான் முன்வைத்தார்.
1931 டிசம்பர் முதல் தேதி நடந்த வட்டமேஜை மாநாட்டின் தலைவர் ராம்ஸே மெக்டனால்டு பேசுகையில் காந்தியை ஒரு இந்து என்று குறிப்பிட்டார். உடனே எழுந்த காந்தி ‘நான் இந்து அல்ல’ என்று முழங்கினார். தம் கடவுளுக்கு தாம் ஒரு ஹிந்து என்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கும் அரசியலுக்கும் தாம் ஒரு இந்தியர் என்றும் அவர் கூறியபோது பெருத்த கரகோஷம் எழுந்தது.
ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும், அரவிந்தரும் ஆரம்பித்த சத்திய யுகத்தை உண்மையாகச் சமூகத்தில் இறக்கியவர் காந்திதான். சமயங்கள் இதுவரை போதித்த துறவை ஒரு தனிமனித வாழ்க்கை அளவோடு நிறுத்திவிடாமல் ஒரு முழு நாட்டின் வாழ்க்கை அளவுக்கு உயர்த்தி நடத்திய போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்டமாகும்.
உள்முக யாத்திரை
காந்தி அடிகள் மேற்கொண்ட உப்புச் சத்தியாக்கிரக யாத்திரை, நவகாளி யாத்திரை போன்ற பல்வேறு யாத்திரைகள் அவரது உள்முக யாத்திரையின் வெளிப்பாடுகளே என்று காந்தியடிகளே சொல்கிறார்.
காந்தி பெஷாவரில் தங்கியிருந்தபோது ஆங்கில நிருபர் கேட்கிறார்.
“உங்களது தேடலில் கடவுள் பற்றிய காட்சிகள் தோன்றியிருக்கின்றனவா? அற்புதங்கள் என்று சொல்லத்தக்க
அனுபவங்கள் உங்களுக்குக் கிட்டியது உண்டா?”
காந்தி பதில் சொன்னார்.
“உண்ணாவிரதத்துக்கு முந்திய நாள்வரை நான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று எண்ணியதே இல்லை. அன்று நடுநிசியில் ஒரு குரல் என்னை எழுப்பி உண்ணாவிரதம் இரு என்று கூறியது. எத்தனை நாட்கள் இருப்பது என்று கேட்டேன். 20 நாட்கள் என்று தெள்ளத் தெளிவாக பதில் குரல் கேட்டது. குறிப்பிட்ட காரியங்கள் பகுத்தறிவால் தூண்டப்பட்டு செய்வதுபோல அல்ல அது. உள்ளுணர்வால் தூண்டப்பட்டு நான் செய்த காரியம்தான் உண்ணாவிரதம். இந்த உணர்வே கடவுள் என்று நம்புகிறேன்”
“கடவுள் இருப்பதாக உணர்கிறீர்கள் அப்படித்தானே?”
“நானும் நீங்களும் இந்த அறையில் இருப்பது எவ்வளவு சர்வ நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் கடவுள் இருப்பதும்!”
கல்கத்தா காளி கோயிலில் நரேந்திரர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்கும்போது என் முன்னால் நீ உட்கார்ந்திருப்பது எப்படி சர்வநிச்சயமோ அதைப் போல கடவுள் உள்ளார் என்று பரமஹம்சர் கூறியதை ஒத்திருக்கிறது இச்சம்பவம்.
இதுகாலம் வரை சில தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமே சத்திய எழுச்சி பெற்ற ஞானிகளாக இருந்தனர். ஒரு முழுச் சமுதாயமும் ஞானச் சமுதாயமாக மாற வேண்டும். ஒரு முழு இனமும் ஞானம் பெற்ற இனமாக மாற வேண்டும். முழு உலகமும் ஞான பூமியாக மலர வேண்டும் - என்பதுவே தமது அகத் தேடலின் வாயிலாக காந்தி உலகுக்கு அறிவித்த செய்தி.
அணைக்கப்பட்ட ரேடியோ!
எங்கள் ஊரில் ஒருபெரியவர் வயது 90 க்குமேல். காந்தியர் அவரைச் சந்தித்து உரையாடுவது உண்டு. பெரும்பாலும் மெளனம் சாதிப்பார். அவர் வீட்டில் ஒரு அழகான அந்தக்கால ரேடியோ பெட்டி இருக்கும். தூசு படிந்து காட்சி தரும்.
.. “ரேடியோ ரிப்பேரா?” - கேட்டேன்.
“அதை அணைச்சு 68 வருஷம் ஆச்சு!”
“ஏன்?”
“காந்தியை சுட்ட செய்தியைச் சொன்னார்கள். ரேடியோவை அணைத்து விட்டேன். இன்றுவரை ரேடியோ கேட்பதில்லை.”
காந்தியின் மரணம் சாமான்ய மனிதர்களை எப்படியெல்லாம் உலுக்கியிருக்கிறது. இப்போது அந்த அறையில் காந்திக்காக ரேடியோ உட்பட மூன்றுபேர் மெளனம் அனுஷ்டித்தோம்!
(தேடல் தொடரும்)
தஞ்சாவூர்க்கவிராயர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com