Published : 03 Oct 2019 11:05 AM
Last Updated : 03 Oct 2019 11:05 AM

தெய்வத்தின் குரல்: கிருஷ்ணனின் ரகசியம்

“இந்த அழிவில்லாத யோகத்தை நான் சூரியனுக்கு உபதேசித்தேன். சூரியன் மனுவுக்கு உபதேசித்தான். மனு இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தான். இவ்விதம் வம்ச பரம்பரையாக வந்த இதனை ராஜரிஷிகள் அறிந்திருந்தனர். எதிரிகளை தபிக்கச் செய்பவனே (அர்ஜுனா)! நெடுங்காலப் போக்கில் அந்த யோகம் இவ்வுலகில் நஷ்டமடைந்தது (நலிவுற்றது) . நீ எனக்கு பக்தன்; தோழனாகவும் இருக்கிறாய்! அப்புராதன யோகமே இன்று என்னால் உனக்கு எடுத்துரைக்கப்பட்டது. இது உத்தமமான ரஹஸ்யம் அன்றோ!”

பகவான் இங்கே சொல்லும் யோகம் கர்மயோகம். அதைத்தான் காலம்காலமாக ராஜரிஷிகள் பரிபாலித்து வந்து, கிருஷ்ணர் காலத்தில் அது சைதில்யமாயிருந்ததால் அவர் மறுபடி ராஜகுலத்தைச் சேர்ந்த அர்ஜுனனுக்கு அதை உபதேசித்துப் புனருத்தாரணம் செய்வதாகச் சொல்கிறார். “ஞான யோகம், கர்மயோகம் என்ற இரண்டையும் நான் முறையே சாங்கியர்கள் என்கிற சன்னியாசிகளுக்கும், யோகிகள் என்கிற நிஷ்காம்ய கர்மமார்க்கிகளுக்கும் உபதேசித்திருக்கிறேன்” என்றும் சொல்லியிருக்கிறார்.

கர்ம யோகத்தின் அதிகாரி

கீதை கர்ம யோகத்தைத்தான் சொல்கிறது என்று சிலர் நினைக்கிற அளவுக்கு அனேக இடங்களில் அதை பகவான் சிலாகித்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறாரென்றால் அதற்குக் காரணம் கீதோபதேசத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட நேர் சிஷ்யனான அர்ஜுனன் கர்ம யோகத்துக்கே அதிகாரியாக இருந்ததுதான். இப்படி, பிரவிருத்தி நிவிருத்தி ஆகிய இரண்டு மார்க்கங்களையும் சீர்ப்படுத்தி்க் கொடுத்து, முடிவாக ஞான மோக்ஷத்தை நிலைநாட்டி, சனாதனமான வைதிக தர்மத்தை சம்ஸ்தாபனம் செய்யவே க்ருஷ்ணாவதாரம் ஏற்பட்டது. கீதாபாஷ்ய உபோத்காதத்தில் (முகவுரையில்) ஆசார்யாள் இப்படித் தெளிவாக்கியிருக்கிறார்.

தாம் சூரியனுக்கு உபதேசித்து, பிறகு ராஜரிஷிகள் வழியாகப் பலகாலம் விளங்கிவந்த கர்மயோகம் தம் நாளில் நஷ்டப்பட்டுப் போனதையே கிருஷ்ண பரமாத்மா வியக்தமாகச் சொன்னபோதிலும், அவருடைய காலத்தில் எல்லா யோகங்களும், எல்லா மார்க்கங்களுமே பழுதாகித்தானிருந்தன என்றும் கீதையிலிருந்து தெரிகிறது. பிற்பாடு கலியில் ஒரேயடியாக சைதில்யம் அடைந்தாற்போல் ஆகாவிட்டாலும், இந்த யுகத்தைத் தொட்டுக்கொண்டு அவர் அவதாரம் செய்த த்வாபராந்தரத்திலும் பொதுப்படையாக ஓரளவு நலிவு எல்லா மார்க்கத்திலும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. கர்மம் செய்யும் இந்திரியங்களை சும்மா வெளிக்கு மட்டும் அடக்கின மாதிரி இருந்துகொண்டு, உள்ளுக்குள்ளே இந்திரிய விஷயங்களான சிற்றின்பங்களையே நினைத்துக் கொண்டிருப்பவன் வெறும் மித்யாசாரன், அதாவது மோசக்காரன், ‘ஹிபாக்ரிட்’ என்று ஒரு இடத்திலே திட்டுகிறார்.

வாய் வேதாந்திகள்

இது நிவ்ருத்தியில், அதாவது ஞான மார்க்கத்தில், போன மாதிரி இருந்துகொண்டே அந்த ஐடியலிலிருந்து நழுவிப்போன வாய் வேதாந்திகள் அந்த நாளிலும் இருந்திருப்பதைக் காட்டுகிறது. இதற்கு முன்னர் தம்முடைய உபதேசத்தை ஆரம்பிக்கும் இரண்டாவது அத்தியாயத்திலேயே, மீமாம்சகர்களைத் திட்டியிருக்கிறார். வேதத்தின் சாரமான தத்துவார்த்தத்தை எடுத்துக் கொள்ளாமல், ஏதோ இலக்கண ரீதியில் மட்டும் அந்த வாக்கியங்களை அலசி வாதம் செய்து அதிலேயே பூரித்துப்போகிற ‘வேத வாதரதா:’ என்கிறார்.

இப்படி மீமாம்ஸகர்கள் அர்த்தம் பண்ணித்தான் வேதத்தின் ப்ரயோஜனமே அது கர்மாவில் மனுஷ்யனை ஏவுவதில்தான் இருக்கிறதே ஒழிய, ஞான விசாரமென்று கர்மாவை விட்டுவிட்டு சன்னியாசியாகப் போகிறதில் இல்லை என்று நிர்ணயிப்பது. ஆசைப் பூர்த்திக்காகவே கர்மங்களைச் செய்யும் இவர்களை “காமாத்மா”க்கள் என்று வைகிறார்.

மோக்ஷமென்ற நித்யானந்தத்தை நாடாமல் தேவலோகம் என்ற கேளிக்கை உலகத்தையே நாடும் ‘ஸ்வர்க்கபர’ர்கள் தங்களுக்கு இந்த வழியில்தான் போகமும் ஐஸ்வர்யமும் கிடைப்பதால், வாஸ்தவத்தில் பிறவிச் சுழலிலேயே பிடித்துத் தள்ளுவதான இந்த விஸ்தாரமான சடங்குகளைப் பற்றிப் பிரமாதமாக, வசீகரமாக பிரசங்கம் பண்ணுகிறவர்கள் — என்றெல்லாம் கண்டனம் செய்கிறார்.

புஷ்பாலங்காரம் செய்வதுபோல வார்த்தைகளை ஜோடித்தே ஜயிக்கிறார்கள் என்பதற்கு ‘புஷ்பிதாம் வாசம்’ என்கிறார். ஆங்கிலத்திலும் Flowery language என்றுதான் சொல்கிறார்கள். இவர்களை அறிவில்லாத ‘அவிபச்சிதர்’கள் என்கிறார். கிருஷ்ணருடைய காலத்தில் கர்மயோகமும் கெட்டுப் போயிருந்ததை இது காட்டுகிறது. ‘பிற்காலத்தில் நஷ்டப்பட்டுப் போன யோகம்’ என்று பகவானே சொன்ன விஷயம். பக்தி மார்க்கத்திலும் தப்பான வழிகள் ஏற்பட்டதை முன்னேயே சொன்னேன். இப்படி எல்லா மார்க்கத்திலும் ஏற்பட்டிருந்த சீரழிவைப் போக்கிப் புனருத்தாரணம் செய்யவேக்ருஷ்ணாவதாரம் ஏற்பட்டது.

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x