Published : 03 Oct 2019 10:43 am

Updated : 03 Oct 2019 10:45 am

 

Published : 03 Oct 2019 10:43 AM
Last Updated : 03 Oct 2019 10:45 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 97: நாட்டியத்தில் நடந்தது நாடகம்

uyir-valarkum-thirumandhiram

கரு.ஆறுமுகத்தமிழன்

ஆட்டத்தின் தொடக்கம் கூத்து. கூத்தாடுபவர் கூத்தர். கூத்து வந்த வகை சொல்கிறது சாத்தனார் எழுதிய கூத்தநூல்.
மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே;
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே;
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே;
ஆட்டம் பிறந்தது கூத்தின் அமைவே;
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே;
நாட்டியம் பிறந்தது நாடக வகையே.
(கூத்த நூல், சுவைநூல் 1)


யாதொன்றும் சுவடுபடாமல் முன்னோன் மட்டுமாக இருந்த பேர்ஊழிக்காலத்தில் ஒலியில்லாப் பேரமைதி; உடுக்கடித்தான் முன்னோன்; சுழன்று எழுந்தது ஓசை; ஓசை இசைந்துவரப் பிறந்தது இன்னிசை; இசையில் எழுந்தது ஆட்டம்; ஆட்டத்தைத் தோதாக அமைத்துக் கொண்டபோது கூத்து; கூத்தை வாகாகக் கோத்துக் கொண்டபோது நாட்டியம்; நாட்டியத்தில் நடந்தது நாடகம். கூத்தை இப்போதல்ல, எப்போதுமே தமிழ்நாடு கொண்டாடியிருக்கிறது. அரசர்களும் பொதுமக்களும் கண்ணடைக்காமல் கூத்தை ஆதரித்திருக்கிறார்கள். கூத்தாடுபவர்களுக்குக் ‘கூத்தக் காணி’ என்ற பெயரிலும் கூத்தைப் பயிற்றுவிப்பவர்களுக்கு ‘நட்டுவக் காணி’ என்ற பெயரிலும் அரசர்கள் நிலம் வழங்கியிருக்கிறார்கள்.

சிவன்ஆவடுதண்துறை

சிவபோதி மரத்தின்கீழ் இருந்து சிவமங்கை பங்கனைச் சிந்தித்துத் திருமூலர் திருமந்திரம் எழுதிய இடம் சிவன்ஆவடுதண்துறை என்று திருமூலராலேயே சுட்டப்பட்ட திருவாவடுதுறை. திருமூலர் நிறைந்த தலமாகக் கருதப்படுவதும் அதுவே. திருவாவடுதுறைக் கோமுத்தீசுவரர் கோயிலின் பெரிய சுற்றாலை மேற்கில் திருமூலருக்கென்று ஒரு தனி முகப்பும் (சன்னிதியும்) இருக்கிறது.

திருவாவடுதுறைக் கோவிலில், புரட்டாசித் திருவிழாவில், திருமூல நாயனாரது நாடகமும் ஆரியக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதற்குக் குமரன் சிறீகண்டன் என்பவர்க்கு நிருத்திய போகமாக (நாட்டியப் பரிசாக) நிலம் அளிக்கப்பெற்றது என்றும் அவன் ‘சாக்கைக் காணி’ உடையவன் என்றும் முதலாம் ராசராசனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (கா.ம.வேங்கடராமையா, கல்லெழுத்துக்களில்..., ப.8).

நானாவித நாடகசாலை

திருக்கடவூர்ச் சிவன் கோயிலில் நட்டுவம் பயிற்றுவிப்பதற்காகக் கால விநோத நிருத்தப் பேர்அரையன் ஆன பாரசிவன் பொன்னன் என்பவனைப் பணி அமர்த்த வேண்டும் என்று மூன்றாம் குலோத்துங்க சோழனிடம் அவனது நண்பரான வீரநடப் பல்லவரையன் என்பவன் விண்ணப்பம் வைக்க, அதன்படியே மன்னன் அரசாணை பிறப்பித்துப் பணி அமர்த்தினான் என்றொரு கல்வெட்டுக் குறிப்பு.

ஆடல்கள் நிகழ்த்தவும் பயிற்றவும் திருக்கோயில்களில் நாடகசாலைகள் இருந்தன திருமூலத் தொடர்புள்ள திருவாவடுதுறையில் ஒரு நாடகசாலை இருந்தது என்றும் அதன் பெயர் நானாவித நாடகசாலை என்றும் ஒரு குறிப்பு. (கா.ம.வேங்கடராமையா, மேற்படி, பக்.12-14).

கூத்தில் வேத்தியல் கூத்து (அகக்கூத்து), பொதுவியல் கூத்து (புறக்கூத்து) என்று ஒரு வகைப்பாடு. வேத்தியல் கூத்து என்பது வேந்தர் காணத் தனியே ஆடப்பட்ட கூத்து; பொதுவியல் கூத்து என்பது அனைவரும் காணப் பொதுவில் ஆடப்பட்ட கூத்து. உட்பிரிவுகளாக வசைக் கூத்து, புகழ்க் கூத்து, வரிக் கூத்து, குரவைக் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக் கூத்து, வெற்றிக் கூத்து, வள்ளிக் கூத்து, துணங்கைக் கூத்து, தமிழ்க் கூத்து, ஆரியக் கூத்து ஆகிய பல சொல்லப்படுகின்றன. ஆரியக் கூத்து என்பது ஆரிய நாட்டுக் கழைக் கூத்தாடிகள் ஆடுவது.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை என்பது பழமொழி. கூத்துகளுக்கு உட்பட்ட ஆடல் வகைகளாகவும் சில சொல்லப்படுகின்றன: கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடி, குடைக்கூத்து, குடக்கூத்து, பேடிக்கூத்து, மரக்கால் கூத்து, பாவைக் கூத்து, கடையக் கூத்து. இவற்றில் கொடுகொட்டி, பாண்டரங்கம் ஆகியன சிவனார் ஆடுவன. முப்புரங்களை எரித்துவிட்டுச் சிவனார் ஆடிய கொடுநடனம் கொடுகொட்டி; வெண்ணிறச் சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடும் சுடுகாட்டு நடனம் பாண்டரங்கம். திருமூலர் இவற்றைக் குறிக்கிறார்.

கொடுகொட்டி, பாண்டரம், கோடு சங்காரம்
நடம்எட்டோடு ஐந்து, ஆறு நாடிஉள் நாடும்
திடம்உற்று எழும்தேவ தாருவாம் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே. (திருமந்திரம் 2733)

இறைவன் ஆடுவன கொடுகொட்டி, பாண்டரங்கம், கோடு ஆகிய அழிவுக் கூத்துகள்; இவற்றில் கோடு என்பது கபாலக் கூத்து என்றும் வழங்கப்பெறும். பிரம்மனின் ஐந்தாம் தலையைக் கிள்ளி அந்தக் கபாலத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆடிய ஆட்டம். இவையல்லாமல் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய பூதங்கள் ஐந்தோடு, ஞாயிறு, திங்கள், உயிர் ஆகிய மூன்றையும் சேர்த்து எட்டிலும் நிரம்பி ஆடுகிறான்; அவன் நிரம்பி ஆடாத பொருள், உயிர் ஒன்றுமே கிடையாது. ஆடிக்கொண்டே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்கிறான். தாருகா வனத்து முனிவர்களின் செருக்கழிக்கத் தாருகா வனத்தில் ஆடினான்; அனைவர்க்கும் காட்டத் தில்லை வனத்தில் ஆடினான்; அம்மைக்குக் காட்ட ஆலங்காட்டில் ஆடினான்.

நல்லது. கூத்தாடுவது எதற்கு? கூத்தாடல் ஒருவகையில் அழகியல்; ஒருவகையில் அரசியல்; அரசியல் சார்ந்த அழகியலும் ஆம். அழித்தவர்கள் களிக்கக் கூத்தாடுகிறார்கள். அழிந்தவர்கள் துளிர்க்கக் கூத்தாடுகிறார்கள். சைவம் வைதிகத்தை வென்று துளிர்க்கக் கூத்தாடியது; வென்று களித்தும் கூத்தாடியது. சாக்த சமயக் காளி தில்லையில் சிவனோடு போட்டியிட்டுத் தோற்றுத் துளிர்க்கக் கூத்தாடினாள்; வங்காளத்தில் சிவனை வென்று காலின்கீழிட்டுக் களித்துக் கூத்தாடினாள். காமவேள் சிவனுக்கு முன்னால் களித்துக் கூத்தாடினான்; சிவனால் எரிக்கப்பட்டபின் துளிர்க்கக் கூத்தாடினான். வரலாறு சொல்கிறவர்களைப் பொறுத்தவை களிப்பும் துளிர்ப்பும்.

(உயிர் துளிர்க்கட்டும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

உயிர் வளர்க்கும் திருமந்திரம்நாடகம்நாட்டியம்சிவன்நாடகசாலைஆரியக் கூத்தாசிவனோடு போட்டிசிவன் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

bommi

பொம்மி தீபாவளி மலர்

இணைப்பிதழ்கள்

More From this Author

x