

ஆர்.அனுராதா
சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்நாளிலேயே மேல்மலையனூரைச் சேர்ந்த அங்காளியின் அருள் வெகுதூரம் வரைப் பரவியிருந்தது. அவளது அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமாக நான்கு பக்தர்கள், மைசூரில் வசித்து வந்தனர்.
அங்காளி மேல் கொண்ட அன்பால் தமது இருப்பிடத்துக்கு அருகிலேயே அவளுக்கு ஆலயம் கட்டுவதற்கு அவர்கள் தீர்மானித்தார்கள். ஆதி சக்தியான மேல் மலையனூர் அம்மனை, தாம் கட்டப் போகும் கோயிலில் எழுந்தருளச் செய்து, அவளது சக்தி விளங்குமிடமான புற்றிலிருந்து மண் எடுத்து வந்து சிலை செய்து கோயிலை அமைக்க முடிவுசெய்தார்கள்.
அம்மன் புறப்பட்டாள்
மேல்மலையனூர் சென்று வேண்டிக்கொண்டு ஆகமப்படி தேர்ந்த சிற்பியைக் கொண்டு அங்காளி சிலையை வடித்து, ஒரு மண்டலம் பூஜை முதலியனவற்றைச் செய்து, அம்மன் உத்தரவு பெற்று புற்று மண் எடுத்துக்கொண்டு மைசூருக்குப் புறப்பட ஏற்பாடானது. புன்னகை தவழும் முகத்துடன் அம்மன் பயணம் புறப்பட்டாள்.
பவானிக்கரையில் நின்றாள்
கொங்கு நாட்டுக்குள் நுழைந்து அதன் வழியாக மைசூர் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். செல்லும் வழியில் இயற்கை வளம் நிறைந்திருந்த பவானி ஆற்றங்கரையில் குமாரபாளையம் என்ற பகுதியில் சந்தியா வந்தனம் செய்ய எண்ணி அம்பிகையின் சிலையைக் கீழே வைத்துவிட்டு, நீராடித் தங்கள் கடன்களை முடித்தார்கள். அதன் பிறகு, பயணத்தைத் தொடர்வதற்காக கீழே வைக்கப்பட்டிருந்த அங்காளியின் சிலையை அசைக்கக்கூட முடியவில்லை. அந்த ஊரில் இருந்த மக்களும் சேர்ந்து முயற்சி செய்தும் அசைக்கக்கூட முடியவில்லை.
திடீரென கூட்டத்தில் இருந்த முதியவள், அருள் வந்து பேசத் தொடங்கினாள் ”யாரும் கவலைப்பட வேண்டாம். கலிகாலத்தில் உலகம் எங்கும் வியாபித்து அருள் புரிந்து அறம் வளர்த்து, நல்லதற்கு நலமும் தீயதற்குத் தேய்வும் அளிக்க ஆங்காங்கே குடிகொள்ளப் போகிறேன், அதற்காக இந்த இடத்தை, நானே தேர்ந்தெடுத்துக் குடிகொண்டேன். யாரும் இல்லாத அநாதரவான இந்த இடம், சுற்றிலும் வெட்டவெளியாகவும் வானமே கூரை, வையகமே மாளிகையாக, வயல் வரப்புகள் நடுவில் உள்ள இந்த இடம் சிறக்கும்” எனக் கூறி மயங்கி விழுந்தாள்.
தெய்வம் நிகழ்த்தியது
அம்மனை மைசூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்ட நால்வரும் கண்ணீருடன், “அம்மா! எங்கள் ஊருக்கு செல்ல அழைத்து வந்தோம், நீயோ நடுவழியில் கோரைப்புல் காட்டில் பவானி நதிக்கரையில் கோயில் கொள்ள நடு வழியில் குடிகொண்டு விட்டாயே” எனப் புலம்பி, அம்பிகையின் எண்ணப்படியே, அந்த நால்வரும் சிலைக்கு முறைப்படியாக வழிபாடு நடத்தி, அங்கேயே ஓர் சிறிய கோயிலைக் கட்டினார்கள்.
சாந்த நாயகி
இந்தத் திருவிளையாடலுடன் அங்கே ஆட்சி புரிய வந்தவள்தான் அங்காள பரமேஸ்வரி. சாத்விக குணமும் பார்வையும் கொண்டவளாக நான்கு கரங்களில் சூலம், டமருகம், கத்தி, கபாலம் ஆகியவற்றைக் கொண்டு இடக் காலை மடக்கி, வலக் காலைத் தொங்க விட்டு அதனடியில் பிரம்ம கபாலமுமாக காட்சி தருகிறாள்.
இங்குள்ள மக்களுக்குக் குலதெய்வமாக இருப்பதுடன் சிம்ம வாகனத்துக்குப் பதிலாக நந்தியை வாகனமாகக் கொண்ட சாந்த சொரூபியாக சைவப் படையல் கொள்பவளாகவும் குடிகொண்டிருக்கிறாள். சக்தியானவள் குடிகொண்டதால் இந்த இடம் சத்தியமங்கலமென அழைக்கப்பட்டது.
ஐந்து நிலை ராஜகோபுரம்
கோயிலின் முன்புறத்தில் 94 வகை சக்திகளோடு சக்தியாக ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அடுத்து வசந்த மண்டபத்தின் முன்னால் கருப்பராயரும் பேச்சியம்மனும் தீமையை ஓட்டும் சம்ஹார ரூபர்களாக விஸ்வரூபமெடுத்து அமர்ந்திருக்கின்றனர் வசந்த மண்டபத்தில் அலங்காரத் தூண்களின் அணிவகுப்பின் முடிவில் கன்னி மூலை கணபதி, அதைத் தொடர்ந்து செந்திலாண்டவர் இருந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தின் தூண்களில் அஷ்டலட்சுமி ரூபங்கள் உள்ளன. அவற்றின் கலையழகும் சக்தி உணர்வும் கண்களையும் மனத்தையும் ஈர்க்கின்றன.
உலக நலன் வேண்டி புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 22-ம் தேதி அஸ்திர ஹோமமும் சோடச லட்சுமி யாகமும் இந்த ஆலயத்தில் நடைபெற்றது. கருவறையின் மேல் இரண்டு நிலை விமானத்தைக் கொண்டு சாந்த சொரூபியாகத் திருக்காட்சி நல்கும் அங்காள பரமேஸ்வரியின் அழகுத் திருக்கோலத்தைப் பார்த்தவுடன் அல்லல் நீங்கும்.
எப்படிச் செல்வது?
ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது.