

தஞ்சாவூர்க் கவிராயர்
மரணம் என்பது
பாழின் இருட்டைத் தொட்டு
உன் நெற்றியில் இட்ட பொட்டு…
அழிவது உடலின் கற்பூர நிர்தத்துவம்
அழியாததுவோ
உயிரின் ஆரத்திச் சுடர்....
- பிரமிள்
பதின்மூன்று வயதிலேயே அந்தச் சிறுவனுக்கு மரணபயம் வந்துவிட்டது. சட்டென்று அவனுக்குள் ஒரு பொறிதட்டுகிறது. சாகப்போவது இந்த உடல்தான் என்றால் நான் என்பது யார்? அகத்தைத் தேடிப் புறப்பட்டுவிட்டான் அந்தச் சிறுவன். உள்முகப்பயணத்தில் அவனைத் துரத்துவது ஒரே கேள்வி நான் யார்?
மரண பயமே அவனை ஆத்மவிசாரத்துக்கு இட்டுச் சென்றது. பகவான் ரமணராக ஆக்கியது.
சாமானிய மனிதர்கள் மரணபயத்திலேயே மாண்டு போகிறார்கள். உயிர் நன்று சாதல் இனிது என்கிறான் பாரதி.
அநாயசமாக மரணத்தை எதிர்கொள்ளும் வித்தையை மகாமிருத்யுஞ்ஜய மந்திரம் கற்றுத்தருகிறது. சுக்ராச்சாரியார் இயற்றியது. மரணத்தை வெல்வதற்கான மந்திரம் இது. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகம் என்று மரணத்தையே பெருமைக்குரியதாக உயர்த்திப் பிடிக்கிறது வள்ளுவம்.
மகான்கள் மட்டுமின்றி மன்னர்களும்கூட ரிஷிகளாக விளங்கியிருக்கிறார்கள். ஜனகர், அசோகர், மூன்றாவதாக மார்கஸ் ஆரேலியஸ் என்கிற ரோமானியச் சக்கரவர்த்தி. மார்கஸ் ஆரேலியஸின் சிந்தனைகள் அஞ்ஞான இருளில் அகத்தைத் தேடிச் செல்வோருக்கு வழிகாட்டும் வைராக்கிய தீபம் ஆகும். இந்த நூல் பிறருக்காக எழுதப்பட்டது அன்று.
தனக்குத்தானே உபதேசித்துக் கொண்டு அவர் எழுதிவைத்த குறிப்புகள் அவர் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பிரசுரம் கண்டது.
மரணபயத்தை வெல்ல வழி உண்டு; வீணாய் கவலைப்படுவதை விட்டுவிட்டு உன் மனம் என்கிற மெளனக் குடிசையில் மறைந்து ஆத்ம சிந்தனை செய் என்கிறான் மார்கஸ் ஆரேலியஸ். ஒரு நாள் நீ இறந்துபோவாய் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு எந்த விஷயத்தையும் சிந்திப்பாயாக. எந்தப் பிரகிருதியிலிருந்து அதன் ஒரு பாகமாக நீ உண்டானாயோ அதனுள் நீ மறைந்து போவாய். உன்னைப் பெற்றெடுத்த பொருளுடன் மறுபடி நீ சேர்ந்து அதுவாகவே நீ போய்விடுவாய். அதனால் என்ன?
பதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கப் போவதாக வாழ்க்கை நடத்த வேண்டாம் மரணம் நிச்சயம். இன்றோ, நாளையோ அது எப்போதும் வரக் காத்திருக்கிறது. உயிருள்ளபோதே அவகாசமிருக்கும் போதே உள்ளத்தைச் சுத்தப்படுத்திக்கொள்.
உள்ளத்தைச் சுத்தப்படுத்த நேரத்தைக் கண்டுபிடிக்கும் உபாயத்தையும் ஆரேலியஸ் சொல்கிறான்.
மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்ன செய்தார்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதில் எல்லாம் காலத்தை வீணாக்காமல் தன்னையே கவனித்து அறவழியில் நின்றால் எவ்வளவு நேரம் ஒருவனுக்கு மிஞ்சும்.
இறந்தபின் வரப்போகும் புகழுக்கு ஆசைப்பட்டு அலையாதே. நீ இறந்தபின் உன்னைப் பற்றி யார் என்ன சொன்னால் உனக்கு என்ன? எரிக்டேட்டிஸ் என்ற தத்துவஞானி சொல்கிறான். இந்த உலக வாழ்க்கையானது என்ன? ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டு அலைகிறது ஆன்மா!அவ்வளவே!
‘முதுமை வந்துவிட்டதே என்ன செய்வேன்?” என்று முணு முணுப்பவர்கள் ஆரேலியஸ் சொல்வதைக் கேட்கட்டும்.
மகாமிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வதுபோல, மரத்தில் உண்டாகி கீழே விழுந்து போகும் பழத்தைப் பார்! தன் வாழ்க்கையில் எவ்வளவு அழகாகவும் சந்தோஷமாகவும் லகுவாகவும் நடத்தி மரத்தினின்று நழுவி தான் பிறந்த மண்ணில் மறுபடி அடங்கிப்போகிறது. அதைப் பின்பற்றுவாயாக.
விருத்தாப்பியம் வந்தது, மரணம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் கவலைப்படுவது ஏன்? வேறு ஒரு தத்துவ ஞானமும் வேண்டாம். எத்தனை நாள் வாழ்ந்தவர்களும் முடிவில் இறந்துதான் போனார்கள். சிறுவயதில் இறந்தவர்களைவிட நீண்டநாள் இருந்து செத்தவர்கள் என்ன லாபம் பெற்றார்கள்? சில ஆண்டுகள் நீடித்து வாழ்வதால் என்ன பயன்? நீ பிறப்பதற்கு முன் எல்லையற்ற காலம்.
இறந்த பின்னும் எல்லையற்ற காலம். இதன் மத்தியில் மூன்று மாதம் இருந்து செத்தால் என்ன? முன்னூறு வருஷங்கள் இருந்தால் என்ன? நீ இவ்வுலகத்திலிருந்து ஐந்து வருஷம் முன்பு போனால் என்ன? பின்பு போனால் என்ன? எந்தச் சக்தி உன்னை உண்டாக்கிற்றோ அந்த சக்தி உன்னைப் போ என்கிறது. இதில் என்ன குற்றம்? நாடகத் தலைவன் நடிகனைப் போ என்பதில் என்ன பிழை?
“ஐயோ! நாடகம் முழுவதும் முடியவில்லையே என்கிறாய். நாடகம் முடியவில்லை என்பது உண்மை. ஆனால் முடியாத நாடகமே நாடகம். நாடகத் தலைவன் இட்ட முடிவே முடிவு. நாடகத்துக்காவது நாடகத்தின் முடிவுக்காவது நீ தலைவன் அல்லன்” ஆகையால் கலங்காமல் உடலை விட்டு நீங்குவாயாக.
சாந்தி அடைவாய், தெய்வமே சரண்” இவ்வாறாக மார்கஸ் ஆரேலியஸின் சிந்தனைகளை மனசுக்குள் அசை போட்டபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். வாசலில் ‘வியாழக்கிழமை சந்நியாசி ’ வந்து நின்றார். அவர் வியாழக்கிழமை தோறும் வருவதால் நாங்கள் சூட்டிய பெயர் இது! நான் உள்ளே போய் இரண்டு வாழைப்பழங்களும் கொஞ்சம் காசும் கொண்டுவந்து கொடுத்து வணங்கினேன்.
என் மனசைப் படித்தவர்போல் “அஞ்சுவது யாதொன்றுமில்லை!
அஞ்ச வருவதுமில்லை!”
- என்ற நாவுக்கரசரின் பாடலைக்
கம்பீரமாகப் பாடி என் நெற்றியில் விபூதி பூசிவிட்டுச் சென்றார். வியாழக்கிழமை சந்நியாசி.
விபூதி சுடலைப் பொடியாய்ச் சுட்டது!
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com