

ரங்காச்சாரி
பவித்ர உற்சவம் என்றால் உற்சவங்களிலேயே சிறப்பானது, புனிதமானது. இந்த உற்சவம் சிவன், பெருமாள் ஆலயங்களிலும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் நடைபெறும். ஆலயங்களின் தன்மை, திருப்பணி செய்வோரின் சக்தியைப் பொருத்து 3 நாட்கள், 5 நாட்கள், 9 நாட்கள் என்று நடத்தப்படும். மிகப் பெரிய ஆலயங்களில் விரிவாக நடைபெறும்.
எல்லாக் கோயில்களிலும் பக்தர்கள், ஆலயப் பணியாளர்களின் வருகையும் ஈடுபாடும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்களை உற்சாகப்படுத்த குறிப்பிட்ட சில நாள்களில் வெகு விமர்சையாக உற்சவம் நடத்தும்போது அனைவரும் வந்திருந்து பங்குகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆலய நியமங்களில் அன்றாடம் ஏற்படும் சிறு பிழைகளுக்கு இது பிராயச்சித்தம் என்று கூறுவோரும் உண்டு.
இந்த நாள்களின்போது ஆலயம் நன்றாக அலங்கரிக்கப்படும். மூலஸ்தான மூர்த்திகளுக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள், நைவேத்தியங்கள், அலங்காரங்கள், வேத பாராயணம், மேள வாத்தியங்களோடு நீண்ட நேரம் வழிபாடுகள் நடத்தப்படும். ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்படும். ஆலயத்துக்கு கைங்கரியம் செய்ய நினைக்கும் மக்களை உபயதாரர்களாகச் சேர்த்து முக்கியப் பணிகளை மேற்கொள்ள இது எல்லாரையும் ஒருங்கிணைக்கும் உற்சவமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, தாங்கள் பணிபுரியும் ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்து வழிபட்டு ஆலயத்திலேயே நெடுநேரம் தங்கி நண்பர்களுடனும் உறவினர்களும் அளவளாவி மகிழும் குடும்ப விழாவாகவும் ஒரு காலத்தில் நடந்தது. பவித்ர உற்சவ காலத்தில் கோயிலுக்குள்ளும் புறப்பாடு காணும் வீதிகளிலும் பந்தல் அமைத்து வீதியை அலங்கரிப்பார்கள். வீட்டுவாசல்களில் கோலமிட்டு விளக்கேற்றி சுவாமியை வரவேற்பார்கள். ஊர்க்காரர்கள் அனைவரும் ஆலயத்திலேயே கூடி உண்டு, அருள் பிரசாதத்தைப் பெறுவார்கள்.
பாடசாலைகளிலும் வீட்டிலும் படித்த வேத பாடங்களைப் பிறருடன் சேர்ந்து சொல்லி உற்சாகமடைவார்கள். இது பக்தியும் கலாச்சாரமும் பின்னிப் பிணைந்த திருவிழாவாக உள்ளது. நாளடைவில் எல்லோருடைய வேலை, தொழில் நெருக்கடி காரணமாக பங்கேற்போரின் எண்ணிக்கையும் நேரமும் படிப்படியாகக் குறைந்துவிட்டது. இப்போது மிகச் சில ஊர்களில் மட்டுமே பவித்ரோற்சவங்கள் பழையபடியே உற்சாகத்தோடும் அக்கறையோடும் நடத்தப்படுகின்றன.