81 ரத்தினங்கள் 18: அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே..!

81 ரத்தினங்கள் 18: அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே..!
Updated on
1 min read

உஷாதேவி

கபந்தன் என்னும் ராஜகுமாரன் ஸ்தூலசிரஸ் என்னும் ரிஷியை அவமதித்ததால் ‘பெரிய உடல் கொண்டவனாக ஆகக்கடவாய்’ என்று சபிக்கப்பட்டான். ஒருசமயம், தேவேந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டு கபந்தனுடைய தொடைகள் வயிற்றுக்குள்ளும் அவனுடைய தலை மார்பிலும் புதைந்தன. வயிற்றில் வாயை வைத்துக் கொண்டு இரு கைகளையும் நீட்டிக் கிடைக்கும் உணவுகளையெல்லாம் கபந்தன் சாப்பிட்டு வந்தான்.

ராமர், லஷ்மணரோடு சீதாப்பிராட்டியைத் தேடி வரும் வேளையில் அவர்களைப் பிடித்துச் சாப்பிட முயன்ற கபந்தனுக்கு வந்திருப்பது, தன்னை சாபத்தில் இருந்து விமோசனம் தரும் தெய்வங்கள் என்று தெரிந்தது. தன்னை எரித்துவிடும்படி கபந்தன் வேண்டினான். ராமலஷ்மணரும் தீமூட்டி கபந்தனை எரித்தார்கள். உடல் எரிந்ததும் அவன் சாபம் நீங்கி தேவசரீரம் கொண்டான்.

தேவசரீரம் கொண்ட கபந்தன் ராமலஷ்மணரின் வருகையின் நோக்கம் உணர்ந்து சீதை இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கான வழிகளைச் சொன்னான். இவ்வழியே சென்றால் மதங்கர் ஆசிரமம் வருமென்றும் அங்கேயிருக்கும் சபரிக்குத் தரிசனம் கொடுத்த பின்பு, அடர்ந்த மரங்கள் நிறைந்த ரிச்யமுகப் பர்வதத்தில் வாழும் சுக்ரீவனின் உதவி கிட்டும் என்று வழிகாட்டினான்.

“இப்படி தெய்வங்களுக்கே உதவமுடிந்த கபந்தனைப் போல் நான் தெய்வ அனுக்கிரகம் பெறவில்லையே சுவாமி” என்று ராமானுஜரிடத்தில் வருத்தத்துடன் சொல்கிறாள் நம் திருக்கோளுர் பெண்பி்ள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:
uyirullavaraiusha@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in