

யுகன்
புத்தகத் திருவிழாக்களில் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும் வாங்கக்கூடிய புத்தகங்களின் பட்டியலில் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நிச்சயம் இடம்பெற்றிருக்கும். சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றைக் கூறும் இந்த நாவல் 1951-ல் கல்கியால் எழுதப்பட்டு வார இதழில் தொடராக வெளிவந்தது. அன்று முதல் இன்றுவரை `பொன்னியின் செல்வன்’ புதினத்துக்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களிடையே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
எம்.ஜி.ஆர். முதல் மணிரத்னம் வரை திரைப்படமாக எடுக்க முயற்சித்த `பொன்னியின் செல்வனை’ மேடை நாடகமாக்க உள்ளனர் சென்னையைச் சேர்ந்த குட்டி குழுவினர். இக்குழுவினர் ஏற்கெனவே `இராமாயணம்’ மற்றும் `மகாபாரதத்தை’ப் பிரம்மாண்டமாக நாடகமாக்கிய அனுபவம் பெற்றவர்கள்.
``இதற்கு முன்பாக சிலர் பொன்னியின் செல்வனை மேடை நாடகமாக்கியிருக்கின்றனர். உங்களின் `பொன்னியின் செல்வனில்’ என்ன சிறப்பு?’’
“வந்தியத்தேவன், நந்தினி, ஆழ்வார்க்கடியான், அருள்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர் எனப் பல கதாபாத்திரங்களைக் கொண்ட இந்தப் புதினத்தை, கல்கியே நேரில் தோன்றி கதையைச் சொல்வதாக கதைக் களம் அமைத்திருக்கிறோம்” என்றார் இயக்குநர் குட்டி. நாடகமாக்கத்தையும் வசனத்தையும் சி.வி.சந்திரமோகன் எழுதுகிறார். `கூல் ஈவென்ட்ஸ்’ குமார் தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்டமான நாடகத்தில் 100 கலைஞர்கள் தோன்ற இருக்கின்றனர்.
எத்தனையோ பாத்திரங்கள் இருந்தாலும் வந்தியத்தேவன் பாத்திரமே பலருக்கும் ஆதர்சமாக இருக்கும். அந்த வந்தியத்தேவன் பாத்திரத்தைப் பிரதானமாக இந்த நாடகத்தில் கையாளப் போவதாகவும் தெரிவித்தனர் நாடகக் குழுவினர். `பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனின் வீரப்பயணம்’ நாடகம் வரும் சனிக்கிழமையன்று சென்னை வாணி மகாலில் அரங்கேறவிருக்கிறது.