81 ரத்தினங்கள்: யான் சத்தியம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே

81 ரத்தினங்கள்: யான் சத்தியம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே
Updated on
1 min read

கிருஷ்ணனை பொய்யன் என்பர், வெண்ணெய் சாப்பிட்டு, மண்ணை சாப்பிட்டு இல்லவே இல்லை என்பான். பலவித மாய லீலா விநோதங்களைச் செய்பவன். இருப்பதை இல்லை என்பான், இல்லாததைக் காண்பிப்பான். ’பொய்நம்பி’ என்றே வைணவ சம்பிரதாயத்தில் குறிப்பிடுகிறார்கள்.

அபிமன்யுவின் குழந்தை அவனது மனைவியான உத்திரையின் வயிற்றில் கருவாக இருந்தபோது, அஸ்வத்தாமனின் அஸ்திரத்தால் செத்து கரிக்கட்டையாகப் பிறந்தான்.

பிரம்மாஸ்திரத்தின் பாதிப்பால் கரிக்கட்டையாக பிறந்த பாண்டவர்களின் வாரிசான அவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், பொய்யே பேசாத ஒரு சுத்த பிரம்மசாரியின் திருவடி, அந்தக் கரிக்கட்டையின் மேல் படவேண்டுமென்று நாரதர் கூறுகிறார். தேவர்களும் அஞ்சிய நிலையில், கிருஷ்ணன், தன் காலால் அந்தக் குழந்தையின் உடலைத் தீண்ட குழந்தை விர்ரென்று அழுது உயிர்பெற்றது. அவன்தான் பரிசித்து.

பதினாராயிரம் தேவிமார்களை உடையவனாகச் சொல்லப்பட்ட கிருஷ்ணன், தான் பிரம்மச்சாரி என்று சொல்லி எப்படி சத்தியம் செய்தான். அவனுக்கு மனைவிகளும் குழந்தைகளும் உலகியலே தவிர, அவன் மனத்தளவில் பற்றற்றவன் என்பதாலேயே தான் பிரம்மச்சாரி என்று சொல்ல முடிந்தது.

தனது பக்தையான திரௌபதி துகிலுரிக்கப்பட்ட நிலையில், ‘துச்சாதனன் ரத்தத்தால் தலையைக் கோதி முடிவேன்’ என்று கிருஷ்ணனை வணங்கிச் செய்த சபதத்தை கிருஷ்ணன் நிறைவேற்றவும் செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தன் தர்மத்தைக் காப்பதற்காகப் பொய் சொன்னாலும் அது சத்தியமே. அதுவே எனது சத்தியம் என்று அபிமன்யுவின் குழந்தையைத் தீண்டினார். அது போல நான் தர்மத்தின்படி வாழவில்லையே சுவாமி என்று ராமானுஜரிடம் திருக்கோளூர் பெண்பிள்ளை கூறுகிறாள்.

“ஸ்ரீ கிருஷ்ணர் பேசிய பொய்யும், ஸ்ரீ ராமர் பேசிய உண்மையும் என்றும் நமக்கு தஞ்சம்.” என்பது எத்தனை உண்மை.

(ரகசியங்கள் தொடரும்)
- உஷாதேவி
தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in