Published : 19 Sep 2019 12:20 PM
Last Updated : 19 Sep 2019 12:20 PM

வாழ்வு இனிது: வீணையும் வயலினும் சங்கமிக்கும் குரல்!

கர்னாடக இசைத் துறையில் பாரம்பரியத்தின் பெருமையையும் அடுத்த தலைமுறையை ஈர்க்கும் புதுமைகளையும் தம்முடைய இசையில் வெளிப்படுத்தும் கலைஞர்களை அடையாளம்கண்டு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக கவுரவித்து வருகிறது இந்திரா சிவசைலம் அறக்கட்டளை.

பாரம்பரியமான கலைகளின் மீது மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்ட தன்னுடைய அன்னை இந்திரா சிவசைலம் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பேரில் இந்த அறக்கட்டளை விருதுகளை வழங்கிவருபவர் டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன். இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் அறக்கொடை விருதுக்கு பிரபல கர்னாடக இசைக் கலைஞர் பந்துல ரமா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அறக்கட்டளையின் 10-வது ஆண்டு நிகழ்வையொட்டி வயலின் கலைஞர் ஆர்.கே.ராம் குமார், மிருதங்கக் கலைஞர் வைத்தியநாதன், முகர்சிங் கலைஞர் பாக்கியலட்சுமி, எம். கிருஷ்ணா ஆகியோருக்கு சிறந்த பக்கவாத்தியக் கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன.

பந்துல ரமாவின் குரலில் வீணையின் இனிமையும் வயலினின் சஞ்சாரமும் போட்டி போடும். அவரின் தந்தை பந்துல கோபால ராவ் பிரபலமான வயலின் வித்வான். தாய் பத்மாவதி வீணை விதூஷி. ஆரம்பத்தில் தன்னுடைய பெற்றோரிடம் இசைப் பயிற்சி பெற்ற ரமா, அதன்பின் ஐவத்தூரி விஜயேஸ்வர ராவிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

நுனிப்புல் மேய்வதுபோல் இல்லாமல் ஆழ்ந்த இசையின் வேர்களை நோக்கி கவனம் செலுத்தும் பாணியை தன்னுடைய பயிற்சியால் வளர்த்துக் கொண்டார் ரமா. அதன் விளைவாகவே அவருக்கு இசையின் நுணுக்கம், தெளிந்த உச்சரிப்பு, மரபின் எல்லைகளுக்குள் புதுமைகளைப் படைப்பது, ரசிகர்களின் மன ஓட்டத்துக்கேற்ற பாடல்களையும் ராகங்களையும் தெரிவுசெய்து பாடுவது, இசையில் நுட்பங்களை அறிந்தவர்களையும் பாமரர்களையும் திருப்திப்படுத்தும் லாகவமான பாணியை அவரால் கைவசப்படுத்த முடிந்தது.

மியூசிக் அகாடமியின் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞருக்கான விருது, சிறந்த பல்லவி பாடகருக்கான விருது, கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை அமைப்பின் ராகம் தானம் பல்லவி விருது போன்றவற்றைப் பெற்றிருக்கும் பந்துல ரமாவின் இசைக் கிரீடத்தில் இந்திரா சிவசைலம் அறக்கட்டளை வழங்கும் அறக்கொடை விருதும் பெருமை சேர்க்கவிருக்கிறது. இந்த விருது வழங்கும் வைபவம் அக்டோபர் 4 அன்று மியூசிக் அகாடமியில் நடைபெறவிருக்கிறது.

- வா.ரவிக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x