

உலகின் இயற்கை எழில்வாய்ந்த தீவுகளில் ஒன்றான அயர்லாந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை இருட்டில் இருந்தது. போரே கதியென்றிருந்த பிரபுக்கள் ரத்தசகதியாக அந்த நிலத்தையும் மக்களையும் ஆண்டுவந்தனர். அந்தத் தேசத்துக்கு கடல்தாண்டி வெளிச்சத்தைக் கொண்டுவந்தவர் புனிதர் பேட்ரிக் அவர்கள்.
தெற்கு வேல்ஸில் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த பேட்ரிக்கின் தாத்தா பாதிரியாராக இருந்தவர். ஆனால், பேட்ரிக் தனது வாலிபத்தில் நாத்திகராகவே இருந்தார்.
கி.பி. நானூறு வாக்கில், பேட்ரிக் தனது கிராமத்திலிருந்து அடிமைக் கப்பலின் தலைவனால் கடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். நடுக்கடலில் கடவுளால் மகிமைப்படுத்தப்பட்ட பேட்ரிக், ஆறு வருடங்கள் தனது கப்பல் தலைவனுக்காகப் பணியாற்றினார்.
பகலிலும் இரவிலும் நூறுக்கும் மேற்பட்ட முறை பிரார்த்தனையில் ஈடுபட்டார். பிரார்த்தனையிலும் உபவாசத்திலும் அவருக்கு இன்னொரு கடவுளும் பரிச்சயமானார். அவர்தான் தந்தையாக இருக்கும் கடவுள். அவர் அடைந்த வாதைகளின் வழியாக இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து, பின்னர் அவர் புனித ஆவியுடனும் இணைந்தார்.
ஓர் இரவில் உபவாசத்துடன் அவர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது கடவுளின் குரலைக் கேட்டார். “நீ சீக்கிரத்தில் உனது தாய்நாட்டுக்குச் செல்லப்போகிறாய். உனக்கான கப்பல் தயாராக உள்ளது” என்று சொன்னது அந்த அசரீரி.
பேட்ரிக், தான் அடிமையாகப் பணியாற்றிய இடத்திலிருந்து தப்பித்து இருநூறு மைல்கள் கடந்து மேற்குக் கடற்கரைக்குச் சென்றார். அங்கே ஒரு கப்பல் தயாராக இருந்தது. தனது குடும்பத்தினருடன் சேர்ந்த அவர், கடவுளின் எல்லையற்ற கருணையை உணர்ந்து திருச்சபைப் படிப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒரு நாள் இரவு அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு கனவின் வழியாக ஓர் அழைப்பு வந்தது. “புனிதச் சிறுவனே, மீண்டும் எங்களிடம் வந்துவிடு. நீ எங்களுக்குத் தேவை” என்றது.
பேட்ரிக் தனது ஆன்மாவுடன் போராட்டம் செய்து கடைசியில் கடவுளின் குரல் தான் தன்னை மீண்டும் அயர்லாந்துக்கு அழைத்தது என்ற முடிவுக்கு வந்தார். தான் பணியாற்றிய திருச்சபையினரைச் சம்மதிக்க வைத்து ஒரு சிறிய கப்பலில் பயணத்தை மேற்கொண்டார்.
ஸ்லானி நதியின் முகத்துவாரத்தில் இறங்கி கரையில் நடந்தபோது அயர்லாந்து தீவில் புதிய யுகம் தொடங்கியது. பழங்குடிகள் யுத்தம் நடத்திவந்த அயர்லாந்து, சந்தேகங்களால் சூழ்ந்த அயர்லாந்து, வன்முறை, மரணங்களாலான அயர்லாந்து என்ற பெயர் அயர்லாந்தை விட்டு நீங்கியது.
யுத்தம் செய்துகொண்டிருந்த காட்டுமிராண்டி பிரபுக்களை நேருக்கு நேராகச் சந்தித்து கிறிஸ்துவின் புகழை பேட்ரிக் பேசினார். ஒருகட்டத்தில் அரசனை நேரடியாகச் சந்தித்த அவர், அயர்லாந்து தேசத்துக்குத்தான் அச்சுறுத்தல் அல்லவென்றும், புதிய ஒளியை, கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டுவந்திருப்பதாகவும் சொன்னார்.
ஈஸ்டர் தினத்தில் புனித பேட்ரிக் ஏற்படுத்திய ஒளி இன்னமும் அயர்லாந்துத் தீவை ஒளிரவைத்துக் கொண்டிருக்கிறது.
“கிறிஸ்துவே என்னுள் இரு, கிறிஸ்துவே என் பின்னால் இரு, கிறிஸ்துவே எனக்கு முன்னால் இரு, கிறிஸ்துவே என்னை வெற்றிகொள், கிறிஸ்துவே என்னைச் சுகப்படுத்தி என்னைக் காப்பாற்று, கிறிஸ்துவே எனக்கு அடியில் இரு, கிறிஸ்துவே எனக்கு மேலாக இரு, விசாரிக்கப்படும்போது, அபாயத்தில் என்னுடன் இரு. நண்பர்கள், அந்நியர்கள் வாயில் சொல்லாக கிறிஸ்துவே இரு, என்னை நேசிக்கும் எல்லோருடைய இதயத்திலும் இரு.”
புனித பேட்ரிக், கவிதை போல எழுதிய இந்தப் பிரார்த்தனை இன்னமும் அயர்லாந்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
- டேவிட் பொன்னுசாமி