

புராணம் என்பது தொன்மம் அல்லது பழங்கதை. புராணங்களில் மூன்று வகை: (1) தெய்வத்தின் சிறப்பைத் தலத்தின் சார்பு இல்லாமல் கூறுவன சிவமகாபுராணம், கந்தபுராணம் என்பனபோல; (2) தெய்வத்தின் சிறப்பை ஏதேனும் ஒரு தலத்தைச் சார்ந்து சொல்வன காஞ்சிப் புராணம்போல; இவை தலபுராணங்கள் எனப்படும்; (3) தெய்வத்தின் அடியார்களாகிய பெரியார்களின் கதையைச் சொல்வன பெரியபுராணம்போல. (- மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு: 13ஆம் நூற்றாண்டு, 1970, ப.235).
இம்மூன்றில் தலபுராணம் என்பது கோயில் அமைந்திருக்கும் இடத்தின் (தலம்) சிறப்பு, அக்கோயிலில் அமைந்திருக்கும் திருவுருவத்தின் (மூர்த்தி) சிறப்பு, அக்கோயிலின் அருகில் அமைந்திருக்கும் குளத்தின் (தீர்த்தம்) சிறப்பு ஆகியவற்றைச் சொல்லி, அத்தகைய திருக்குளத்தில் நீராடி, அந்தத் திருஇடத்தில் அமைந் திருக்கும் திருஉருவத்தை வழிபடச் சொல்லி, அவ்வாறு வழிபட்டதால் இன்னின்னார் இன்னின்ன பயன் பெற்றனர் என்றும் சொல்வது ஆகும்.
திருப்பரங்குன்றம், திருச்சீர்அலைவாய் என்ற திருச்செந்தூர், திருஆவினன்குடி என்ற பழநி, திருவேரகம் என்ற சாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய ஐந்து தலங்களின் பெருமை பேசியதோடு குன்றுதோறாடல் என்று ஆறாவது பெயரில் குன்றெல்லாம் குமரன் இடம் என்று பாடிய திருமுருகாற்றுப்படை; கணவனைப் பிரிந்து தவித்திருக்கும் கண்ணகிக்கு, சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய குளங்களில் முழுகிக் காமவேள் கோயிலில் வழிபாடு செய்தால் கணவனைக் கூடலாம் என்று அவள் தோழி தேவந்தி சொன்னதாக இடம், குளம், உருவம் ஆகியவை பற்றிய மக்கள் நம்பிக்கையைக் குறித்து சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது.
தலபுராணங்களின் தோற்றம்
இவற்றிலேயே தலபுராணக் கூறுகள் தடம் காட்டுவதை அறிய முடிந்தாலும், தலபுராணங்கள் என்ற தனித்த நூல்வகைமை தோன்றியது பின்னாளில்தான். அதற்குக் காரணமாக இருந்தது தமிழ்நாட்டின் பத்தி இயக்கம். கோயில் கோயிலாய்ச் சென்று, ஆலயத்தின் திருக்கதவு திறக்கப் பாடி, திறந்த கதவு மூடப் பாடி, நோயின்றி வாழப் பாடி, காசுக்கும் இடைஇடையேப் பாடி, பெண் வேண்டிப் பாடி, சொன்ன பொய்யினால் இழந்த கண் வேண்டிப் பாடி, பக்திக்கும் பாடி, முக்திக்கும் பாடி இடம், குளம், உருவம் ஆகியவற்றின் பெருமையைச் சைவத்தின் சார்பில் மிகக் குறிப்பாய் முன்னிலைப்படுத்தியவர்கள் நாயன்மார்களே. சுந்தரமூர்த்தி நாயனார் பாடுவதைப் பாருங்கள்:
இயக்கர், கின்னரர், ஞமனொடு வருணன்,
இயங்கு தீ,வளி, ஞாயிறு, திங்கள்,
மயக்கம் இல்புலி, வானரம், நாகம்,
வசுக்கள், வானவர், தானவர் எல்லாம்
அயர்ப்புஒன்று இன்றிநின் திருஅடி அதனை
அருச்சித் தார்பெறும் ஆர்அருள் கண்டு
திகைப்புஒன்று இன்றிநின் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
(தேவாரம், 7:55:6)
திருப்புன்கூர்த் தலத்தின் இறைவா! இயக்கர்கள், கின்னரர்கள், யமன், வருணன், தீ, காற்று, கதிரவன், நிலவு, புலி, குரங்கு, பாம்பு, வசுக்கள், தேவர்கள், அசுரர் என்று எல்லோரும் உன் திருவடியைப் போற்றி அருளைப் பெறுகிறார்கள். அப்படி இருக்கும்போது எனக்கென்ன தடுமாற்றம்? நானும் உன் திருவடியைப் போற்றுகிறேன்.
பத்தி இயக்கத்தால் கால்கோள் செய்யப்பட்ட தலம் புகழும் பெருவழக்கம், தனிநூல் செய்யும் வழக்கமானது பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், வீரைத் தலைவன் பரசமய கோளரி (பிற சமயங்களின் கொள்கைகளுக்குச் சிங்கம் போன்றவன்) செய்த திருப்பாதிரிப்புலியூர்த் தலபுராண நூல்கள் அட்டாதச புராணம், கன்னிவன புராணம் என்பன. இவற்றைக் கல்வெட்டின் வாயிலாக அறிகிறோமே தவிர நூல்கள் கிடைக்கவில்லை.
பின்னர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் எழுதிய திருஆலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் என்னும் நூல்தான் நமக்குக் கிடைக்கும் முதல் தலபுராண நூல் என்கிறார் மு.அருணாசலம் (மேற்சொன்ன நூல், ப.236). புராணம் மதுரையைப் பற்றியது என்றாலும் அதில் அவர் கடவுள் வாழ்த்தாகத் தொடங்கும் ஐந்து பாடல்கள் சிற்றம்பலத்தைப் பற்றியவை.
பொருப்பைப் பண்பொடும் குனித்துச் சண்டவெம்
புரத்தைப் பொன்றமுன் சிரித்துக் கண்டவன்;
கரப்பொன் குன்றுஅடும் திறத்துச் சிங்கம்;என்
கருத்துள் தங்கும்அஞ்சு எழுத்துச் சம்பு;வண்
தரக்குக் கொள்பதஞ் சலிக்குத் தென்தலம்
தழைப்பத் தொம்தொம்என்று இசைத்துச் சந்தததம்
திருத்தச் செம்பதம் புரிப்பித்து அன்புஉறும்
திருச்சிற் றம்பலம் திருச்சிற் றம்பலம்.
(திருஆலவாய் உடையார் திருவிளை யாடல் புராணம், கடவுள் வாழ்த்து, 2)
மலையை வில்லாக வளைத்தவன்; சிரிப்பாலேயே முப்புரங்களை எரித்தவன்; கயாசுரன் என்ற ஆனையை அடித்த சிங்கம்; என் கருத்தில் நிலைத்திருக்கும் ‘நமச்சிவாய’ என்னும் அஞ்செழுத்துக்கு உரிய சிவன்; புலிக்கால் முனிக்காகவும் பதஞ்சலிக்காகவும் மட்டுமல்லாது தென்னாடே தழைப்பதற்காகவும் தொம்தொம் என்று ஒவ்வொரு நாளும் ஆடி, தன்னுடைய அழகிய திருவடியை அனைவர்க்கும் வழங்கி அன்புறும் இடம் திருச்சிற்றம்பலம். இப்பாட்டை வாய்விட்டுப் படித்துக் கிடைக்கும் ஓசைஇன்பத்தைப் பெற வேண்டுவல்.
பெரும்பற்றப்புலியூர் நம்பி மதுரையை வைத்துத் தலபுராணம் இயற்றியிருக்க, உமாபதி சிவம் தில்லையைப் பற்றி இயற்றிய புராணம் கோயிற் புராணம். பிறகு பதினாறாம் நூற்றாண்டிலும் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளிலும் தல புராணங்கள் வதவதவென்று இயற்றப்பட்டன. தலபுராணப் பாடல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை 120 பாடல்கள் (திருமூலநகரப் புராணம்); மிகுதிஅளவு எண்ணிக்கை 6,892 (திருநெல்வேலிப் புராணம்). உ.வே.சா.வின் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பல்வேறு காரணங்களுக்காக இயற்றித் தள்ளிய தலபுராணங்கள் மட்டும் மொத்தம் இருபத்திரண்டு என்று சொல்லப்படுகிறது.
தில்லைச் சிற்றம்பலமே சிறப்பு
ஒவ்வொரு கோயிலும் அமைந்தி ருக்கும் இடம், குளம், உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் தலபுராணங்கள் பாடப்பட்டாலும் எல்லாவற்றிலும் சிறப்பு தில்லைச் சிற்றம்பலமே என்கிறார் குமரகுருபர அடிகளார்:
தீர்த்தம் என்பது சிவகங் கையே;
ஏத்த அருந்தலம் எழில்புலி யூரே;
மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே.
(சிதம்பரச் செய்யுள் கோவை, 45)
குளம் என்றால் அது தில்லைக் கோயிலின் சிவகங்கைக் குளந்தான். ஏன்? தில்லைக் கூத்தன் திருமேனியைக் கழுவிய நீர் அதனுள் பாய்கிறது. போற்றுதலுக்கும் அப்பாற்பட்ட இடம் புலியூராகிய தில்லைச் சிற்றம்பலந்தான். ஏன்? அங்கேதான் உருவம் (கூத்தன்), அருவம் (உருவற்ற நிலை), அருவுருவம் (இலிங்கம்) ஆகிய மூன்று நிலைகளிலும் இறை இறங்கியிருக்கிறது. உருவம் என்று பேசப்பட்டால் அம்பலக் கூத்தன் உருவந்தான். ஏன்? அது வெறும் உருவம் அன்று; மெய்யியல் விளக்கம்.
இவ்வளவு இருந்தபோதிலும் சிற்றம்பலமாகிய சிதம்பரம் என்னும் தலத்தைப் புற உலகத்திலிருந்து அக உலகத்துக்குக் கொண்டு வரத் திருமூலர் விரும்புகிறார். ஏன்? ஏனென்றால் புற உலகத் தலமாக இருக்கும் ஓரிடம் தன்னிடம் வருவோரில் சிலரை அள்ளி அணைக்கிறது; சிலரைத் தள்ளி வைக்கிறது என்பதால். அப்பேர்ப்பட்ட திருமூலர் ஒரே ஓரிடத்தில் ஒட்டியும் ஒட்டாமல் தலம் பாடுகிறார்:
தேவரோடு ஆடித் திருஅம்ப லத்துஆடி
மூவரோடும் ஆடி, முனிசனத் தோடுஆடிப்
பாவின்உள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவில்உள் ஆடிடும் கூத்தப் பிரானே.
(திருமந்திரம் 2757)
கூத்தப்பிரான் தேவரோடு ஆடினான்; நுண்அறிவு வெளியாகிய சிற்றம்பலத்து ஆடினான்; முத்தொழில் செய்கிற மூவரோடு ஆடினான்; முனிவர்களோடு ஆடினான்; பாக்களுக்குள் ஆடினான்; பராசக்தியில் ஆடினான்; கோயிலுக் குள்ளும் (தில்லை) ஆடினான்.
திருமூலர்போன்ற அறிவர்கள் தலங்களைத் தள்ளினாலும் சனங்கள் கொள்கிறார்களே, ஏன்? ஏனென்றால் தலங்கள் எல்லையற்ற பரம்பொருளைச் சனங்களின் எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன; விண்ணிலி ருக்கும் கடவுளை மண்ணுக்கு இறக்கிப் புழுதி படியப் பக்கத்தில் வைத்திருக்கின்றன. கடலை மிட்டாயோ, கடவுளோ, கைக்கு எட்டாவிட்டால் என்ன பயன்?
- (எட்டும் மெய்ப்பொருள்)
கரு.ஆறுமுகத்தமிழன்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com