

வா.ரவிக்குமார்
மதுரை மீனாட்சி மறுவடிவம்
எங்கள் மாணிக்க நாச்சி திருவடிவம்
புதிய வாழ்வு தரும் வடிவம்
இந்த பூமியில் என்றும் உயர் வடிவம்
கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியின் புகழ் போற்றும் பாமாலை இது. சாய் சோமு எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் டி.எல்.தியாகராஜன். ராம் இசையகம் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் தீபிகா தியாகராஜன். கண்டரமாணிக்கத்தில் அருள்பாலிக்கும் மாணிக்க நாச்சியை பல்வேறு சக்தியின் வடிவங்களாகப் போற்றுகிறது இந்தப் பாடல்.
கல்வி, ஆரோக்கியம், செல்வம் போன்றவற்றை தன்னுடைய பக்தர்களுக்கு அருளாய்ப் பொழியும் அன்னையின் அருட்கொடையை தன்னுடைய இனிமையான குரலால் கேட்பவர்களின் காதுகளில் தேன் பாய்ச்சுகிறது தீபிகாவின் குரலிசை. நம்முடைய பாரம்பரியமான வீணை, தபேலா, வயலினைக் கொண்டே பாடலின் நேர்த்திக்கு அழகு சேர்த்திருக்கிறார் தியாகராஜன்.
தீபிகாவின் குரலில் வெளிப்படும் இனிமைக்கும் தீர்க்கத்துக்கும் அவருடைய கடுமையான இசைப் பயிற்சி ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம், அவரின் இசைப் பாரம்பரியம். எம்.எல். வசந்தகுமாரியின் முதன்மைச் சீடரான சரோஜா ஸ்ரீநிவாசன் தீபிகாவின் அம்மாவழிப் பாட்டி. இவர்தான் தீபிகாவின் முதல் குரு. கர்னாடக இசை உலகிலும் திரைத் துறையிலும் மிகவும் பிரபலமான திருச்சி லோகநாதனின் பேத்தி தீபிகா.
மேற்கத்திய பாணியில் பாடும் முறை, பியானோ வாத்தியத்தை இசைப்பது என இசையின் பல்வேறு பரிமாணங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கும் தீபிகா, இசை மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளில் இசையையும் உளவியலையும் உள்ளடக்கி தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துவருகிறார். வரதட்சிணைக் கொடுமை, இளைஞர்களிடம் நாட்டுப் பற்றை உண்டாக்கும் எண்ணற்றப் பாடல்களை யூடியூபின் வழியாக வெளியிட்டிருக்கிறார் தீபிகா.
- வாராய் தீபிகா… வாராய் !
மதுரை மீனாட்சி மறுவடிவம் பாடலைக் காண: