

சிந்துகுமாரன்
‘கடவுள் மனிதனைப் படைக்கவில்லை; மனிதன்தான் கடவுளைப் படைக்கிறான். மனிதனின் அச்சம் கடவுள் என்னும் கருத்தை உருவாக்கியிருக்கிறது,’ என்கின்றனர் நாத்திகர். ஒரு கோணத்தில் இது உண்மைதான் என்றே கொள்ளலாம்.
ஒரு மனிதனின் மனத்தில் அச்சம் நிறைந்திருக்கும்வரை கடவுள் என்பது உண்மையில் என்ன என்று அவனால் அறிந்துகொள்ள முடியாது.
தன் பாதுகாப்புக்காகப் பொய்க்கருத்துகளை அந்த மனம் உருவாக்கி அவற்றை வழிபடத் தொடங்கிவிடும். அந்த மாதிரியான மனிதன் பல நூல்களைக் கற்றிருக்கலாம். ஆன்மிக விஷயங்களை மணிக்கணக்கில் அவன் பேசலாம். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை.
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்
என்கிறார் திருவள்ளுவர். ஆத்மார்த்தமான தேடல் உள்ள ஒருவன் புறவயமான அறிவை விடுத்து, அகத்தில் பார்வையைத் திருப்பிவிடுவான்.
உருவ வழிபாட்டில் மனம் படைக்கும் உருவங்களின் பங்கும் உண்டு. கையாலோ மனத்தாலோ படைக்கப்படும் வடிவங்கள் கடவுள் அல்ல. ஆனால் ஆராதிப்பதில் உள்ளார்ந்த ஆத்மபக்தி உடையவனின் பார்வையில் இந்த வடிவங்கள் அவனுடைய ஆத்மசாதகத்துக்குப் பெரிதும் உதவ முடியும். மனிதன் படைக்கும் உருவங்களில்கூடப் பரம்பொருள் எழுந்தருள முடியும் என்கிறது ஆதிதர்மம். ஆதிதர்மம் என்று நான் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட மதம் இல்லை. அனைத்து மதங்களுக்கும் தோற்றுவாயாக விளங்குவது இது.
பிரபஞ்சத்தின் ஆழமானதொரு பரிமாணம் இது; காலமற்றது; ‘ஆக்கம் - இருத்தல் - அழிவு’ என்னும் முறைப்பாட்டுக்கு அப்பாற்பட்டது; அதற்கு முந்தையது. இதன் காரணமாகவே பெரும்பாலான மதங்களின் வழிபாட்டு முறைகளில் உருவ வழிபாட்டுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உருவமோ வடிவமோ தன்னளவில் கடவுள் இல்லை என்பது தெரியவேண்டும். தன் பிரக்ஞையை - அறிவுணர்வை - ஒரு குவிமையத்தில் கொண்டுவந்து விழித்துக்கொள்ளச் செய்யும் பயிற்சியில் இந்த வடிவங்கள் பெரும்பங்கு வகிக்க முடியும். ஓரளவுக்கு அறிவு முதிர்ச்சி உள்ள ஒரு சாதகர், இந்த உபாயங்களைப் பயன்படுத்திக்கொண்டு,
தன் ஆன்ம ரூபத்தை அனுபவம்கொள்ள முடியும்.
மனப்பிம்பம் அல்ல
ஆதியில் இருந்த சிலர், பிரக்ஞை வெளிப்பாட்டுக்கு உகந்ததான வழிமுறைகளை நெறிப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் அறிவு முதிர்ச்சியற்ற மனங்கள் இதனால் பயன் பெற முடியாது. ஏனெனில், அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள் இன்னும் தன் மனப்பிம்பத்தையே தான் என்று கருதிக்கொண்டு வாழ்கிறார்கள். உண்மையான தேடலுக்கு இவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை. நினைவுகளின் அடிப்படையில் இயங்கும் மனப்பிம்பம் (Ego), தேடலில் ஈடுபட முடியாது. அது என்றும் ஆன்ம தரிசனத்தை அடைய முடியாது. ஏனெனில் அதன் முடிவில்தான் ஆன்ம விழிப்பு ஏற்படுவதே சாத்தியம்.
உருவ வழிபாட்டை ஏற்படுத்தியவர்கள் அந்த உருவங்களே கடவுள் என்று எப்போதும் சொன்னதில்லை. உருவங்களே கடவுளானால் பிறகு ஆத்மசாதகம் எதற்காக? உருவங்கள் சாதகத்துக்கான சாதனங்கள் மட்டுமே. ‘அறிவுணர்வு’ என்னும் ஆன்ம ஒளி, மனம் என்னும் படிகத்தின் வழியாக சிதறித் தெறித்திருக்கும் நிலையிலிருக்கிறது. அதிலிருந்து விடுபட்டுச் சுயகவனத்தில் நிலைகொண்டு, தன்னில் தான் விழித்துக்கொள்ளவேண்டும்.
அதுவே ஆன்ம விழிப்பு. இந்த முறைப்பாட்டுக்கு உதவியாக இருப்பதே ‘இஷ்டதெய்வம்’ என்னும் தத்துவம். அது ஒரு சாதனம். சிலர் சிவனை வணங்குகிறார்கள். சிலர் நாராயணனை; சிலர் ஈஸ்வரியைத் தெய்வமாகக் கொள்கிறார்கள். அவரவர் மனப்பாங்குக்கேற்றவாறு முருகனை, விநாயகனை, ராமனை, கிருஷ்ணனை, மகான்களை வணங்குகிறார்கள் சாதகர்கள். இவை கடவுளல்ல; சாதனங்களே.
ராமன் என்பது
கேரள மாநிலத்தில் உள்ள கஞ்சன்கோடு கிராமத்தில் ஆனந்தாச்ரமத்தை உருவாக்கி அதில் வசித்துவந்த பாபா ராமதாஸ் என்ற மகான், காணும் பொருள் அனைத்திலும் தான் ராமனையே காண்பதாகச் சொன்னார். ஒரு முறை அவர், ‘ராமன் என்று நான் சொல்வது, அயோத்தியை ஆண்ட தசரதகுமாரனை அல்ல. ராமன் என்பது உருவங்களையெல்லாம் கடந்த தத்துவம்,’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆன்மவிழிப்புக்கு வழி உண்டு
புலன்கள் கிரகித்துக்கொண்டிருக்கும் புறவுலகத்தின் மீது படர்ந்திருக்கும் கவனத்தை உள்நோக்கித் திருப்பவேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளின் வழியாகப் புறவுலகத்திலிருந்து விடுபட்ட கவனத்தை ஒருமுகப்படுத்தவேண்டும். அதற்கு உருவ வழிபாடு உதவும். பிறகு, காணப்படும் பொருள், காணும் தான், இரண்டும் வெவ்வேறல்ல என்று அறிந்துகொள்வது; கடைசியாகக் கவனத்தைப் பொருள்களிலிருந்து முற்றிலுமாக விடுவித்துத் தன் மீதே லயிக்க வைத்து நிலைப்படுத்துவது.
இந்த லயிப்பில் ஆன்ம விழிப்பு ஏற்பட முடியும். நினைவுகளின் அடிப்படையில் ஏற்படும் காலதேசவுணர்வில் லயித்திருக்கும் மனத்தைக் கடந்து, ‘நான்’ என்று நமக்குள் விகசித்திருக்கும் பரம்பொருளைக் கண்டுகொள்வது இந்த முறைப்பாட்டின் நோக்கம். ஆனால் இந்தக் கடைசிக் கட்டம் தானாக நடக்கவேண்டும். இதுதான் ஆன்மசாதகம். நிலத்தைப் பண்படுத்தி, விதையை நடுவது மட்டுமே நாம் செய்யக் கூடியது. பலன் தானாகக் கிட்டும். அதை நாம் முடிவுசெய்ய முடியாது.
இஷ்டதெய்வம் என்னும் தத்துவம் இந்த விழிப்பு முறைப்பாட்டின் இலக்கணத்தை நன்கறிந்தவர்கள் செய்துவைத்தது. உருவ வழிபாட்டின் ஆழ்ந்த உள்ளியக்க விதிகள் குறித்து ஏதுமறியாமல் அவற்றை ஏளனம் செய்வது சிறுபிள்ளைத்தனம். அதே நேரத்தில் உருவத்தையே கடவுளாகப் பாவித்து, வெறும் மனத்தளவில் வரங்கள் கேட்பதும் அதே அளவுக்குச் சிறுபிள்ளைத்தனம்தான். இந்த இரண்டு சாரார்களுக்கும் காலமற்ற, தொடக்கமும் முடிவும் இல்லாத உண்மையை அறிந்துகொள்ளும் ஆவல் இல்லை. அதையும் வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது பெருமைக்காகவோதான் அவர்கள் பார்க்கிறார்கள்.
இந்தப் பாதை கடினமானது. பெருமளவுக்குத் தன்மீது நம்பிக்கை வேண்டும். தன் நோக்கத்தின்மீது அசையாத நம்பிக்கை வேண்டும். தன் உள்ளொளி ஒரு மெழுகுவர்த்தியின் சுடரைப் போன்று மிகச் சிறியதாயினும், அதன் மங்கிய ஒளியில் தன் பாதையில் தொடர்ந்து நடப்பவர்களுக்குப் பிரபஞ்சப் பேரொளி துணை நிற்கும்.
சரியான வெளிச்சங்களைச் சரியான நேரத்தில், சரியான நபர் வழியாகக் காட்டும். ஒளி கூடும். யாரை நம்பலாம், யாரை நம்பவேண்டாம் என்பது உள்ளுணர்வுக்குத் தெளிவாகப் புலப்படும்.
கூடவே துணையாக ஏதோ இருந்து வருவதான உணர்வு எந்நேரமும் இருக்கும். அந்த உள்ளுணர்வை நம்பவேண்டும். மனத்தின் பொய்க்குரலுக்கும் இந்த உள்ளுணர்வின் மென்குரலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளப் பழகவேண்டும்.
ஆத்மார்த்தமான தேடலும் தாகமும் இருக்கும் பட்சத்தில், வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் இந்தப் பாதையில் நம்மை முன்னே நகர்த்த வல்லது. நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்ட முடியும்.
பரம்பொருள் காத்திருக்கிறது
பரம்பொருள் நம்மைச் சந்திக்கப் பெரும் ஆவலோடு காத்திருக்கிறது; தன்னாலியன்ற உதவிகளைச் செய்ய அது தயாராக இருக்கிறது. ஆனால் மற்ற அனைத்தையும் விடுத்து, நெஞ்சுருகிப் பரம்பொருளை அடைவது மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாக இருக்கும்போது மட்டும்தான் இந்தச் சந்திப்பு கைகூடும்.
(அறிவு கைகூடும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com