

தை மாதம் மகம் நட்சத்திரத்தில் பார்கவ மகரிஷிக்கும் கனகாங்கி என்னும் அப்சரசுக்கும், திருமழிசையாழ்வார் வெறும் சதைப் பிண்டமாகப் பிறந்தார். தெய்வத்தின் கிருபையால் அனைத்து அங்கங்களுடன் சரீரத்தைப் பெற்று திருவாளன் என்னும் பிரம்பறுப்பவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். முதலாழ்வார்களின் சம காலத்தவர் திருமழிசையாழ்வார்.
மகரிஷிக்குப் பிறந்ததால் தெய்வீக ஞானத்துடன் விளங்கினார். நல்லது, தீயது என அனைத்தையும் ஆராய்ந்தவர், எல்லா சமயங்களையும் ஆராய்ந்தார். சிறுவயது முதலே கடவுளை அடைய ஆசைப்பட்டு, அதன் காரணப் பொருளை அறிவதற்காகப் பேராவல் கொண்டார். சைவம், சாக்கியம், சமணம் என்று ஆராய்ந்து அதனதன் சாரத்தை கிரகித்தார்.
கடைசியாக வைஷ்ண சிந்தாந்த சாரத்தை ‘அன்று பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்’ என்றபடி திட்டமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு மற்றவற்றை விட்டார். திருமழிசையாழ்வார் இன்றும் கல்கி அவதாரத்தைத் தரிசித்து பாசுரம் பாட வேண்டும் என்ற ஆவலில் ஜீவ சமாதியாக கும்பகோணத்தில் காத்திருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது.
நாராயணன் நான்முகனைப் படைத்தான்
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான்
என்று நாராயணனே ஆதிமூலம், அவனே பரம்பொருள் என்று அறுதியாகச் சொல்கிறார்.
ஓடியோடிக் கற்றுத் தேர்ந்து கடைசியில் சாரமான விஷயத்தை திருமழிசையாழ்வார் கிரகித்தாரே அதுபோல சாரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுக்கும் ருசி தனக்கு இல்லையே என்று திருக்கோளூர் பெண்பிள்ளை, ராமானுஜரிடம் வருந்திச் சொல்கிறாள்.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com