

வா.ரவிக்குமார்
எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைப் பள்ளியை ராஜபாளையத்தில் நடத்துவதோடு, அரசுப் பள்ளியில் பகுதிநேர இசை வகுப்புகளையும் குழந்தைகளுக்கு நடத்துகிறார் உமாசங்கர். கம்ப ராமாயணப் பாடல்களையும், கம்பனைப் பற்றி கண்ணதாசன் எழுதிய பாடலையும் சங்கத் தமிழ்ப் பாடல்களையும் எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பாடவைத்து `மியூசிக் டிராப்ஸ்’ என்னும் தலைப்பில் யூடியூபில் பதிவேற்றுகிறார். இந்த வரிசையில் விநாயகர் துதிப் பாடல் ஒன்றை அண்மையில் பதிவேற்றியிருக்கிறார்.
முழுமுதற் கடவுள் விநாயகனைச் சிறப்பிக்கும் எத்தனையோ பாடல்களை அருளாளர்கள் எழுதியிருக்கின்றனர். திருவிழாக்கள், பண்டிகைகள், ஆலயத் திருப்பணிகள் எது நடந்தாலும் விநாயகனுக்கு முதல் மரியாதை செய்துவிட்டு மற்ற சடங்குகளைச் செய்வது மரபாக இருக்கிறது. விநாயகன் எளிமையின் சொரூபன். மண்ணைக் கொண்டும், மஞ்சள் தூளைக் கொண்டும், மாவைக் கொண்டும் பிடித்துவைத்தால் போதும்.
பிள்ளையார் தயார். விநாயகனை முதல்வனே, தலைவனே, இறைவனே என்று விளிக்கும் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். ஆனால் நண்பனே என்று விநாயகனை இந்தப் பாடலில் கொண்டாடி இருக்கிறார் பாடலை எழுதியிருக்கும் கணேஷ் கார்பெண்டர். பொறியியல் படிக்கும் உமாயும் பதினோராம் வகுப்பு படிக்கும் அரவிந்தநாதனும் பாடலை இறை அனுபூதி வெளிப்படும் வண்ணம் பாடியிருக்கின்றனர். முதல்வனாகவும் தலைவனாகவும் இறைவனாகவும் நண்பனாகவும் விநாயகரை அழைப்பதற்கான காரண காரியங்களையும் இந்தப் பாடல் விவரிக்கிறது.
"பண்டைய இசை மரபில் காணப்படும் முல்லைத் தீம்பாணி இன்றைக்கு மோகனம் என்னும் ராகமாக அழைக்கப்படுகிறது. அந்த ராகத்தில்தான் `எத்தனையோ தடைகள் உண்டு சாலையில்’ என்னும் விநாயகர் சதுர்த்திப் பாடலை அமைத்திருக்கிறேன்" என்கிறார் உமாசங்கர்.
‘வினை தீர்க்கும் விநாயகர்’பாடலைக் காண இணையச் சுட்டி: