

ஒரு நாளிரவு நடுச்சாமத்தில் முல்லாவின் வீட்டுக்கு வெளியே இரண்டு குடிகாரர்கள் கூச்சலிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உறக்கம் கலைந்துபோன முல்லா, எழுந்து போர்வையைச் சுற்றிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தார். இரண்டு குடிகாரர்களையும் சமாதானம் செய்யலாமென்ற நல்லெண்ணத்துடன் அருகில் சென்றார்.
"என்னப்பா, என்ன பிரச்சினை?" என்று ஒருவனது தோளைத் தொட்டுக் கேட்டார் முல்லா.
திரும்பியவன் அவரிடமிருந்த போர்வையை உருவிக்கொண்டு ஓடியே போனான். உடன் சண்டை போட்டவனும் அவன் பின்னாலேயே ஓடிச் சென்றான். “எதற்காக இந்தச் சண்டை?” என்று படுக்கையறைக்குள் நுழைந்த முல்லாவிடம் அவர் மனைவி கேட்டார். “போர்வைதான் காரணமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அது கிடைத்தவுடன் சண்டை நின்றுவிட்டது.” என்று கட்டிலில் சாய்ந்தார் முல்லா.
அம்மையாரே
விளக்குகள் இல்லாத சாலையொன்றில் நடந்துசென்ற முல்லாவின் பணப்பையை ஒரு திருடன் பறிக்க முயன்றான். முல்லாவோ உடனடியாகத் தடுத்து அவனைப் பிடிக்க முயற்சித்தார். அவன் கழுத்தைப் பிடித்து, அவனைத் தரையில் தள்ளி அவன் மேல் அமர்ந்தார்.
அந்த நேரம் அங்கே வந்த ஓர் இரக்கம் மிகுந்த பெண்மணி அந்தக் காட்சியைப் பார்த்தார். “ஏய் வம்புக்காரனே! உன்னைவிட உடலில் சிறிய மனிதனின் மீது ஏறி அமர்ந்திருக்கிறாய். நீ எழுந்தால் தானே அவனுக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று கேட்டார்.
“அம்மையாரே” என்று மூச்சிரைத்தபடி பேசினார் முல்லா. “இவனை நான் கீழே கிடத்துவதற்கு எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியாது.”