

ஒரு முறை யாரோ ஒருவரின் பழத்தோட்டத்துக்குள் முல்லா நுழைந்து அப்ரிகாட் பழங்களைப் பறிக்கத் தொடங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக, தோட்டக்காரர் அவரைப் பார்த்துவிட்டார். உடனடியாக, முல்லா மரத்தில் ஏறிக்கொண்டார். ‘இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார் தோட்டக்காரர்.
‘பாடிக்கொண்டிருக்கிறேன். நான் ஒரு தேன்சிட்டு’ என்றார்.
‘ஓ, அப்படியென்றால் எனக்காக ஒரு பாட்டுப் பாடு தேன்சிட்டே’ என்றார் தோட்டக்காரர்.
முல்லா அபஸ்வரத்தில் சில வரிகளைப் பாடினார். அதைக் கேட்ட தோட்டக்காரர் அதிர்ந்து சிரித்தார்.
‘இப்படியொரு தேன்சிட்டின் பாடலை இதுவரை நான் கேட்டதேயில்லை’ என்றார் அவர்.
‘நீங்கள் பயணமே செய்திருக்க மாட்டீர்கள் என்று உங்களைப் பார்த்தாலே தெரிகிறது. நான் ஓர் அயல்நாட்டு தேன்சிட்டின் பாடலைப் பாடினேன்’ என்றார் முல்லா.
சோப்பைத் திருடிய காகம்
முல்லா, ஒரு நாள் வீட்டுக்கு சோப் கட்டி ஒன்றைக் கொண்டுவந்தார். அதை வைத்துத் தன் சட்டையைத் துவைக்கும்படி மனைவியிடம் சொன்னார் முல்லா.
அவர் மனைவி, சட்டையைத் துவைக்க ஆரம்பித்தவுடன், எங்கிருந்தோ அங்குவந்த காகம் ஒன்று, அந்த சோப் கட்டியைக் கவ்விக்கொண்டு பறந்துவிட்டது. முல்லாவுடைய மனைவி கோபத்துடன் கத்தினார்.
‘என்னவாயிற்று அன்பே?’ என்று கேட்டபடி, முல்லா வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓடிவந்தார்.
‘நான் உங்கள் சட்டையைத் துவைக்கவிருந்தபோது, அந்தப் பெரிய காகம் கீழே வந்து சோப் கட்டியைத் திருடிக்கொண்டு போய்விட்டது’ என்றார்.
முல்லா கலக்கமடையவில்லை. ‘என் சட்டையின் நிறத்தைப் பார். காகத்தின் நிறத்தைப் பார். அதன் தேவை, சந்தேகமில்லாமல் என் தேவையைவிடப் பெரிது. என் சட்டையைத் துவைக்க முடியாமல் போனது பற்றி எனக்குக் கவலையில்லை. அதற்கு சோப் கட்டி கிடைத்ததுதான் நல்ல விஷயம்’ என்றார் முல்லா.
- யாழினி