

சனியாஸ்னைன் கான்
குரைஷ் தலைவர்களின் வெறுப்பையும் மீறி, மக்காவில் இஸ்லாம் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தபடி இருந்தனர். இதைப் பார்த்த தலைவர்கள் கடுங்கோபம் கொண்டனர். இறைத்தூதரின் நண்பர்களுக்கு அவர்கள் கடும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்தக் கட்டத்தில், தன் நண்பர்களை மக்காவிலிருந்து வேறு இடத்துக்குச் செல்லும்படி அறிவுறுத்தினார் இறைத்தூதர்.
“அல்லாவின் இறைத்தூதரே, நாங்கள் எங்கே செல்வது?” என்று கேட்டனர் அவர்கள்.
இறைத்தூதர் அவர்களை எத்தியோப்பியாவுக்குச் செல்லுமாறு கூறினார். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் இந்நாட்டைச் செங்கடல் பிரிக்கிறது.
எத்தியோப்பியாவை ஒரு கிறித்துவ அரசர், நேர்மையாக நீதி முறைப்படி ஆட்சி செய்து வருகிறார் என்று இறைத்தூதர் தெரிவித்தார். யாரும் யாரையும் ஒடுக்காத ஆட்சிநிலை அங்கே நிலவியது.
படகில் பயணம்
அதனால், இறைத்தூதரின் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் மக்காவிலிருந்து எத்தியோப்பியாவுக்குக் குடிபெயரத் தொடங்கினார்கள். குர் ஆன், புனித வெளிப்பாடு தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் இந்தக் குடிபெயர்வு நடந்தது.
எத்தியோப்பியாவுக்குச் சென்ற முதல் இஸ்லாமியக் குழுவில், 11 ஆண்களும், 5 பெண்களும் இருந்தனர். இந்தக் குழுவில், உத்மனும், அவருடைய மனைவியும், இறைத்தூதரின் மகள் ருக்கய்யா உள்ளிட்டோரும் இருந்தனர். அவர்கள் ரகசியமாக மக்காவைவிட்டு வெளியேறி, ஜெத்தா துறைமுகத்தை அடைந்தனர். அவர்கள் அங்கேயிருந்த இரண்டு படகுகளில் எத்தியோப்பியாவுக்குப் பயணமாகத் தயாராக இருந்தனர்.
மக்காவின் தலைவர்களுக்கு இந்தத் தகவல் தெரிந்தவுடன், அவர்களைக் கைதுசெய்து அழைத்துவரும்படி, குதிரைகளில் ஆட்களை அனுப்பினார்கள். ஆனால், அவர்கள் வருவதற்குள், படகுகள் இஸ்லாமியர்களை அழைத்துக்கொண்டு எத்தியோப்பியாவுக்குப் பயணமாயின. இஸ்லாமியர்களின் முதல் குழு, விரைவில் எத்தியோப்பியாவை அடைந்தது.
சிறிது காலத்தில், மீண்டும் பெரிய எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் குழு, மக்காவிலிருந்து எத்தியோப்பியாவுக்குப் புறப்பட்டது. இந்தக் குழுவில் 86 ஆண்களும் 17 பெண்களும் இருந்தனர். பெரிய எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள், எத்தியோப்பியாவுக்குக் குடிபெயரத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி குரைஷ் தலைவர்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் அங்கே அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையில் தலைவர்கள் ஈடுபட்டனர். எத்தியோப்பியாவின் அரசர் நெகஸுக்குப் பரிசுகள் கொடுத்து அமர் இபின் அல்-அஸ், அப்துல்லா இபின் ராபியா, குரைஷ் அதிகாரிகள் உள்ளிட்டோரை அனுப்பத் திட்டமிட்டனர். இதன்மூலம் எத்தியோப்பிய அரசரின் நற்பெயரைப் பெறலாம் என்று அவர்கள் நினைத்தனர்.
பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)
ஓவியம்: குர்மீத்