

உஷாதேவி
விஷ்ணு சித்தர், விஷ்ணுவையே தன் சித்தத்தில் வைத்ததால் கருடனின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தார். மதுராவில் மாலாகாரர், மாலை கட்டிச் சமர்ப்பித்ததன் நினைவாக விஷ்ணு சித்தரும் நந்தவனம் அமைத்து இறைவனுக்கு மாலை கட்டிச் சமர்ப்பித்தார்.
ஒரு சமயம் மதுரையை ஆண்ட வல்லபதேவன் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தபோது, ஒரு வீட்டுத் திண்ணையில் கங்கா யாத்திரை சென்று திரும்பிய அந்தணர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் விடுதலைக்கான வழியைக் கேட்டார். இரவு சுகமாயிருக்க பகலில் உழைக்கவேண்டும், மழைக் காலத்துக்குத் தேவை யானதைச் சேமித்து வைப்பது, முதுமையில் சிரமம் இல்லாமல் வாழ இளமையில் உழைப்பது போன்றே இந்த ஜன்மத்தில் ஆரோக்கியமாக இருக்கும்போதே கடவுளைப் பக்தி புரிய வேண்டுமென்று உபதேசித்தார்.
அத்துடன் பரப்பிரம்மம் யார் என்ற தனது சந்தேகத்தை அமைச்சரான செல்வ நம்பியிடம் கேட்டார். செல்வ நம்பி வித்வத் தபஸ் வைத்து பொற்கிழி ஒன்றையும் கட்டித் தொங்கவிடச் சொன்னார். பரப்பிரம்மம் யார் என்பது நிரூபணம் ஆன உடன் பொற்கிழி தாழும் என்று அறிவிக்கவும் சொன்னார். அறிவில் சிறந்த ஆன்றோர் பலரும் வந்து அவர்களுக்குத் தெரிந்த பரப்பிரம்மத்தைச் சொன்னார்கள். ஆனால், அரசனுக்கு மனம் திருப்தி கொள்ளவில்லை. பொற்கிழியும் தாழவில்லை.
விஷ்ணுசித்தரின் கனவில்
அன்று இரவு விஷ்ணு சித்தரின் கனவில் வந்த இறைவன் மதுரைக்குச் சென்று வல்லபதேவனின் சந்தேகத்தைத் தீர்க்க, யாமே பரப்பிரம்மம் என்று கூறுவாயாக என்று கூறி மறைந்தார். மறுநாள் வல்லப தேவனின் அரண்மனைக்கு வந்த பெரியாழ்வார், விஷ்ணுவே பரப்பிரம்மம், அவனே பரதத்வம் என்று விளக்கினார். அரண்மனையில் கட்டிவைக்கப்பட்டிருந்த பொற்கிழி தாழ்ந்தது. பாண்டிய மன்னன் விஷ்ணு சித்தரை வணங்கினான்.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்கமெடுத்தூத – வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான், பாதங்கள் யாமுடைய பற்று.
சங்கெல்லாம் முழங்க மங்கல ஒலிகள் எழுப்பி பெரியாழ்வார் என்று கொண்டாடித் தன் பட்டத்து யானை மீது ஏற்றி வல்லப தேவன் பரவசப்பட்டான். யானை மீது அமர்ந்து வரும் பெரியாழ்வாரைக் காண கூடலழகப் பெருமான் கருட வாகனத்தில் வேகமாக வந்தார். இறைவனைக் கண்டு பரவசப்பட்ட பெரியாழ்வார் யானையின் இருபக்க மணியையும் எடுத்து ஒலித்துக்கொண்டு, உன் அழகிற்கு கண் திருஷ்டி வந்துவிடும் என்று பல்லாண்டு பாடுகிறார்.
“பெரியாழ்வாரைப் போல எம்பெருமான் நம் இறைவன் என்று நான் கூறவில்லையே சுவாமி” என்று ராமானுஜரிடம் ஆற்றாமையுடன் நம் திருக்கோளூர் பெண்பிள்ளை சொன்னாள்.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com