

இந்திராதி தேவர்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மகாவிஷ்ணு திரிபுரங்களுக்குப் புறப்பட முடிவுசெய்தார். அதற்காக, அவர் ஒரு பௌத்த மதகுருவின் வேடம் எடுத்து, நாரதரைத் தன் மாணவனாக அழைத்துக்கொண்டு திரிபுர மக்களைச் சந்திக்கக் கிளம்பினார். அங்கு சென்று அங்கு வாழ்பவர்களுக்குப் பல அற்புதங்களைச் செய்துகாட்டினார். அந்த அற்புதங்களை நம்பிய அவர்களுக்குச் சிவ சின்னங்கள் மீதும், சிவ பூசையின் மீதும் விருப்பமில்லாமல் போகச் செய்து அவர்களைப் பாவிகளாக மாற்றினார்.
திரிபுராதிகளான அவர்களுடைய தலைவர்கள் தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகியோர் சிவபெருமான் மீது அபார பக்தி உள்ளவர்களாகையால் அவர்களை மாற்றுவதற்கு மகாவிஷ்ணுவால் முடியவில்லை. அவர்களை மாற்ற முடியாவிட்டாலும் அவர்களுடைய குடிமக்களை மாற்றியதே போதுமென்று இந்திர லோகம் திரும்பினார்.
இந்திரலோகத்திலிருந்து இந்திராதி தேவர்களை அழைத்துக்கொண்டு கைலாயத்தை அடைந்தார். கைலாயத்தின் வாயிலில் காவல் புரியும் நந்தி தேவரை வணங்கி, “ நாங்களெல்லாம் திரிபுராதிகள் செய்கின்ற கொடுமைகளைத் தாங்க முடியாமல் அடைக்கலம் தேடி இங்கு வந்திருக்கிறோம். சிவ பெருமானிடம் சென்று எங்கள் நிலைமையைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
அதற்கு நந்தி தேவர், “நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரிபுரவாசிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் சிவபூசையைச் செய்வதையெல்லாம் விட்டுவிட்டுப் பலருக்கும் கொடுமை செய்துவருகிறார்கள். நீங்கள் அனைவரும் இங்கேயே காத்திருங்கள். நான் சென்று சிவபெருமானுக்கு உங்களைப் பற்றித் தெரியப்படுத்திவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். நந்திதேவர் கூறியதைக் கேட்ட சிவபெருமான், “நான் திரிபுர சம்காரம் செய்வதற்கு வில், தேர் போன்றவற்றை ஏற்பாடு செய்யும்படி தேவர்களுக்குக் கட்டளையிடவும்” என்று கூறினார்.
திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை
அன்புஜெயா
திருபீடம் வெளியீடு
தொடர்புக்கு: காந்தளகம்,
சென்னை 600002
தொலைபேசி:
044 28414505
விலை:ரூ.120