உட்பொருள் அறிவோம் 27: இயல்பூக்கம் என்னும் மாயசக்தி

உட்பொருள் அறிவோம் 27: இயல்பூக்கம் என்னும் மாயசக்தி
Updated on
3 min read

சிந்துகுமாரன்

பிரம்மரிஷிப் பட்டம் வாங்கியே தீருவேன் என்று சபதம் மேற்கொண்ட விச்வாமித்திரர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவர் தவத்தின் தீவிரத்தால் இந்திர, தேவ, லோகங்கள் அதிரத் தொடங்கின. தேவர்கள் அச்சம் கொண்டனர். இந்திரன் மேனகையை அழைத்தான். விச்வாமித்திரரின் தவத்தைக் கலைக்கும்படிச் சொன்னான். மேனகை அவ்வாறே விச்வாமித்திரர் தவத்தில் அமர்ந்திருக்கும் கானகத்துக்குச் சென்றாள். அவர் தவத்தின் வெம்மையில் அந்தப் பிரதேசமே காய்ந்து, வறண்டு போயிருந்தது. மேனகை தன் சக்தியால் அந்தப் பிரதேசத்தில் வசந்த காலத்தை ஏற்படுத்தினாள். செடிகள் பூத்துக் குலுங்கின. மரங்கள் பூத்துச் சொரிந்தன.

பூக்களின் வாசம் இன்ப லாகிரியைப் பரப்பின. பறவைகள் பாடிப் பறந்தன. காணுமிடமெல்லாம் அழகின் அதிர்வு நிறைந்தது. விச்வாமித்திரர் கண்களைத் திறந்தார். சூழ்ந்திருக்கும் அழகின் அதிர்வைக் கண்டார். மேனகை அப்போது அங்கே வந்தாள். சௌந்தர்யமே வடிவெடுத்து அவர் முன்னால் நின்றது. அவள் கண்களின் வீச்சும் உடலின் அசைவும் அவரைக் கிறங்கடித்தன. அவர் உடலில் புதிய உணர்ச்சிகள் எழுந்தன. புதுவிதமான ஒரு உஷ்ணம் தலைக்கேறியது. தன்னிலை மறந்தார். தன் தவத்தை மறந்தார்.

பிரம்மரிஷி நிலைக்கு முன்னேறும் தன் நோக்கத்தை மறந்தார். மேனகையுடன் ஒன்றினார். அவள் கருத்தரித்தாள். மேனகை தேவலோகப் பெண்ணாதலால் பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உடனே குழந்தை பிறந்தது.பெண் குழந்தை. அந்தக் குழந்தைதான் சகுந்தலை. விச்வாமித்திரர் சுயநினைவுக்கு வந்தார். தன் உயரிய நோக்கத்தி லிருந்து தான் வீழ்ந்ததை அறிந்துகொண்டார். தன்னிடம் சேர்ந்திருந்த தவவலிமையைப் பெருமளவுக்குத் தான் இழந்து விட்டிருந்ததை அறிந்துகொண்டார். மீண்டும் தவத்தைத் தொடர்ந்து பிரம்ம ரிஷியானார் என்பது கதை.

ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சம்

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்ச முழுமையின் வெளிப்பாடு. இந்த உண்மையை மனித சமூகம் இன்னும் அறிந்துகொள்ளத் தொடங்கக்கூட இல்லை. ஒரு குழந்தை பிறந்ததும் சுற்றியுள்ள சமூகம், அந்தக் குழந்தையின் முழுமையைப் பற்றிய அறிவில்லாமல், தன் கலாச்சாரச் சட்டகங்களைக் குழந்தையின் மனத்தில் ஏற்றிவிடுகிறது. இது சரி, இது தவறு என்று வரையறைகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் முழுமையின் பெரும்பகுதி உள்ளே பிரக்ஞையிலிருந்து மறைக்கப்பட்டுவிடுகிறது. திரை விழுந்தது போலாகிவிடுகிறது.

இதையடுத்து, குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது தவிர, வளரும்போது குழந்தை தானாகவே சில வரையறைகளை மேற்கொள்கிறது. இப்படி நான் இருக்கவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் முடிவு செய்துகொண்டுவிடுகிறது. இதன் காரணமாக, வளர்ந்த மனிதன், முழுமை இழந்த அரைகுறை மனிதனாகவே இருக்கிறான்.

ஆனால் மனிதனுக்குள் தன் முழுமையை மீண்டும் அடையும் விழைவு உள்ளார்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலான மனிதர்களுக்குள் இந்த விழைவு செல்வம் சேர்ப்பதிலும், இன்பம் தேடுவதிலும் செயல்படுகிறது. அகமுதிர்ச்சி அடைந்த சிலரிடம் இது முழுமை நாடும் நோக்கத்தை எழுப்பி, அந்தத் திசையில் அவர்களை வழிநடத்துகிறது. உள்ளே ஒடுக்கிவைக்கப்பட்ட பகுதிகள் வெளிப்பட்டு, அனுபவம் கொள்ளத் துடிக்கின்றன.
ஒருவர் முழுமையடைவதற்கு பாலின்பம் பெரும் தடை என்று சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக் கின்றோம். இயற்கையின் இயல்பான ஆழ்மனச் சக்திகள் அடக்கி ஒடுக்கப்படுகின்றன.

பெரும் வீரியம் கொண்ட சக்திகள் இவை. தனிமனிதனின் மனம் இவற்றின் சக்திக்கு முன்னால் வலிமையற்றுப்போகிறது. மனம் தோற்றுப் போய்க் குற்றவுணர்வில் வீழ்ந்து அல்லல்படுகிறது. ஆழ்தளச் சக்திகள் குறித்த சரியான புரிதல் இல்லாமையால் நேர்ந்திருக்கும் தவறு இது. இயல்பூக்கங்களை அடக்கிவைப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இதன் காரணமாகப் பெரும் சக்தி விரயம் ஏற்படுகிறது. எந்தவிதமான வளர்ச்சிக்கும் இது வழிவகுக்காது. பாலுணர்வின் வீச்சு பற்றிய கல்வி, புரிதலின் அவசியத்தை உணர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

உலகம் என்னும் பிரதிபலிப்பு

நம் வாழ்க்கையின் எந்த அம்சத்திலிருந்தும் நாம் தப்பித்துவிட முடியாது. எதை அடக்குகிறோமோ அது அனுபவமாக வெளிப்பட்டே தீரும். உண்மையில் வெளியே எதுவுமில்லை. வெளியே என்று நாம் சொல்வது புலனுணர்வினால் கட்டமைக்கப்பட்ட உலகத்தைத்தான். அங்கு நாம் அனுபவம் கொள்வது எல்லாமே நம் அகநிலையின் பிரதிபலிப்புதான்.

பெண்ணின்பத்தைத் தவிர்ப்பதாக நினைத்துக் கொண்டு, விச்வாமித்திரர் தனக்குள்ளே, தன் பிரக்ஞையின் அங்கமான பெண்மைத் தன்மையிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு, அதை அடக்கி வைக்கிறார். அவ்வாறு அடக்கிவைக்கப்பட்ட பெண்மையின் சக்தி மேனகையாக வடிவம்கொண்டு வெளிப்படுகிறது. அகத்தில் ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு சக்திகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தளத்துக்கும் அதற்கான சக்தியும் புத்தியும் இயங்குகின்றன. இந்திரன் என்பது அவ்வாறான ஒரு சக்தி. அந்தத் தளத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் பிற சக்திகளைப் பயன்படுத்திக்கொண்டு அது செயல்படுகிறது.

மேனகை அவ்வாறானதொரு சக்தியின் குறியீடு. முழுமையின் ஒருங்கமைவுதான் அதன் நோக்கம். அதற்குப் பாதகமான விஷயங்கள் நடைபெறும்போது, அந்தத் தளத்தின் உயிர்ச்சக்தி அதைத் தவிர்ப்பதற்காக ஆவன செய்யும். இந்த ஆழமான உண்மையைத்தான் இந்தக் கதை நமக்கு உணர்த்த முற்படுகிறது.
அடிப்படைச் சமூக மாற்றம் ஏற்பட்டாலொழிய மனித வாழ்வில் நிறைவும் சந்தோஷமும் இருப்பது சாத்தியமில்லை. இது நிகழ்வதற்கு, அடக்கி ஒடுக்கிவைக்கப்பட்டிருக்கும் வாழ்வின் அம்சங்கள் இருளிலிருந்து வெளிப்பட்டு பிரக்ஞையின் ஒளிவட்டத்தினுள் வரவேண்டும்.

அகிலம் உயிருள்ள ஜீவன்

வாழ்க்கை பற்றிய நம் பெரும்பாலான கருத்துக்கள் அடிப்படையிலேயே தவறானவையாக உள்ளன. அவை பற்றிய உண்மைகளை நாம் அறிந்துகொள்வது அவசியம். அகிலம் உயிருள்ள ஒரு ஜீவன். வெறும் ஜடப் பொருளாலான அகிலம் மனிதனைப் போன்ற சுயவுணர்வுள்ள ஜீவனைப் படைத்திருக்க முடியாது. சுயவுணர்வுள்ள ஜீவனைப் படைத்திருக்கும் இந்த அகிலம், சுயவுணர்வுள்ள ஒரு பெரும் ஜீவனாகத்தான் இருக்க முடியும்.

அகிலம் உயிரும் உணர்வும் உள்ள ஜீவன் என்று கொண்டால்தான் அதனுடன் நமக்கு உறவு ஏற்பட முடியும். அந்த உறவு அவசியம். அகிலத்துடன் பரஸ்பரப் பரிமாற்றம் ஏற்படும்போதுதான் அதன் முழுமையுடன் நமக்குள்ள தொடர்பு தெரியவரும். மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு அது அத்தியாவசியமானது. ‘நானே பிரம்மமாக இருக்கிறேன்‘ - அஹம் பிரம்ம அஸ்மி - என்னும் உண்மை நேரடி அனுபவமாக வெளிப்படும்.

(உண்மையைச் சந்திப்போம்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு:
sindhukumaran2019@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in