

முருகன் வழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை சிவ வழிபாட்டைப் போல மிகமிகத் தொன்மையானது. இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்க நூல்களிலேயே கூட பல உதிரிப் பாடல்கள், கடவுள் வாழ்த்துப் பாடல்கள், திருமுருகாற்றுப்படை போன்றவை முருகனைப் போற்றும்முகமாக அமைந்துள்ளன. இவையனைத்துமே தொகுப்பு நூல்கள்தான். எனவே, விட்டுப் போனதும் அழிந்து போனதும் ஆகிய ஆயிரக்கணக்கான சங்கப் பாடல்களில் முருகன் பற்றிய பாடல்கள் பல இருந்திருக்கக் கூடும்.
முருகனைப் பற்றிய தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டுமானால், அத்தொகுப்பே பலப்பலத் தொகுதிகளாக அமைய நேரிடும். சங்கப் பாடல்களில் முருகன், காப்பியங்களில் முருகன், புராணங்களில் முருகன், பிள்ளைத் தமிழ்களில் முருகன், சிற்றிலக்கியங்களில் முருகன், சங்கரர் போற்றும் முருகன் என்பன போன்ற தலைப்புகளில் பிஎன். முத்துக்குமரன் அந்தந்த தொகுப்புகளில் தம் மனத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்திய பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார். இந்த வைப்பு முறையே தமிழகத்தில் முருக வழிபாடு எப்படித் தோன்றி எப்படி வளர்ந்தது என்பதை அறிய ஒரு வாய்ப்பை நல்கும்.
தமிழர் கண்ட முருகன் ஏதோவொரு குறுகிய சமூகத்துக்கு உரியவனல்லன். உலகம் முழுவதும் அறிந்து வழிபட வேண்டியவன் என்ற உயரிய கருத்தைக் குறிப்பால் உணர்த்தவே திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப்ப’ என்று தொடங்குகிறது. பின்னர்த் தோன்றிய கந்த புராணம் முருகன் திரு அவதாரத்தைச் சொல்லவரும் போது ‘சைவம் தழைக்க’ என்றோ, ‘தமிழர்கள் உய்ய’ என்றோ கூறாமல் உலகம் முழுவதும் உய்வதற்காக முருகன் திரு அவதாரம் செய்தான் என்று கூறும் வகையில், ‘ஒரு திருமுருகன் வந்த ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என்றே பேசிச் செல்கிறது இந்நூல்.
முருகன்அருள் செல்வம்
பிஎல். முத்துக்குமரன்
முல்லை பதிப்பகம்
விலை : ரூ. 300
தொடர்புக்கு: 9840358301