

டேவிட் பொன்னுசாமி
ரோமின் கிளமெண்ட் என்ற பெயருடையவரும், முதல் அப்போஸ்தலப் பாதிரியுமான புனித கிளமெண்ட் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர். புனித பீட்டருக்கு அடுத்து மூன்றாம் போப்பாகப் பதவி வகித்தவர் ஆவார்.
ரோமானிய யுகத்தில், கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கைகளுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களில் கிளமெண்டும் ஒருவர். ரோமிலிருந்து வெளியேற்றப்பட்டு, ரஷ்யாவில் உள்ள கல்குவாரியில் கட்டாய உழைப்பில் கிளமெண்ட் ஈடுபடுத்தப்பட்டார்.
அங்கே சென்றபோது, அவரைப் போன்ற கைதிகள் தாகத்தால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அவர் நின்ற குன்றில் ஒரு குட்டி ஆடு நின்று கொண்டிருந்தது. ஆடு நின்றுகொண்டிருந்த இடத்தில் தனது கோடாலியை வீசி பாறையைப் பிளந்தார். அங்கிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. அந்த அற்புதம் அங்கிருந்த கைதிகளை கிறிஸ்துமீது ஈடுபாடு கொண்டவர்களாக மாற்றியது. இந்தச் செயலைப் பார்த்த ரோமானியப் படைவீரர்கள், கிளமெண்டை ஒரு நங்கூரத்தில் கட்டி கருங்கடலில் உள்ள படகிலிருந்து எறிந்தனர்.
கிளமெண்டின் உடலைத் தேடி அவருடைய சீடர்கள் கருங்கடலுக்குச் சென்றபோது, கடல் மூன்று மைல்களுக்கு உள்வாங்கியது. கிளமெண்டின் உடல் கிடந்த இடத்தில் ஒரு ஆலயம் எழும்பியிருந்தது. அதற்கடுத்து ஒவ்வோர்ஆண்டும், கிளமெண்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் கடல் மூன்று மைல்களுக்கு பின்வாங்கி, வழிபடுபவர்களுக்கு வழிவிட்டது. கிளமெண்டின் நினைவு ஆலயத்துக்கு தன் தாயுடன் வந்த ஒரு சிறுவன், கடல் மீண்டும் முன்வாங்கும் போது ஆலயத்திலேயே சிக்கிக் கொண்டான்.
மகன் இறந்துவிட்டதாக நினைத்த தாய், வேதனையுடன் அடுத்த ஆண்டு, மீண்டும் அதே நாளில் சென்றபோது, அப்போதுதான் தூங்கி எழுந்ததுபோல எழுந்துவந்ததாகக் கூறப்படுகிறது. கிளமெண்டின் எலும்புகள் ரோமில் உள்ள ஆலயமொன்றில் இன்னும் பாதுகாக்கப்படுகின்றன.