

‘விதி என்றால் என்ன?’ என்று ஓர் அறிஞர் முல்லாவிடம் கேட்டார்.
‘சங்கிலி போல ஒன்றோடொன்று கோக்கப்பட்டு முடிவில்லாமல் தொடரும், ஒன்றின்மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள்’ என்றார் முல்லா.
‘இந்தப் பதில் அப்படியொன்றும் திருப்திகரமானதாகயில்லை. நான் காரணகாரிய விளைவுகளை நம்புகிறேன்’ என்றார் அந்த அறிஞர்.
‘அப்படியென்றால் மிகவும் நல்லது’ என்று சொன்ன முல்லா, ‘அங்கே பாருங்கள்,’ என்று தெருவில் கடந்து சென்று கொண்டிருந்த ஓர் ஊர்வலத்தை முல்லா சுட்டிக்காட்டினார்.
‘அந்த நபரைத் தூக்கிலிடப் போகிறார்கள். யாரோ ஒருவர் அவரிடம் கொடுத்த ஒரு வெள்ளிக்காசு அதற்குக் காரணமா? ஏனென்றால், அதை வைத்துதான் அவர் கொலை செய்வதற்குக் கத்தி வாங்கினார். அவர் கொலை செய்ததைப் பார்த்த யாரோ ஒருவர்தான் அதற்குக் காரணமா? இல்லாவிட்டால், அந்தக் கொலையை யாருமே தடுக்காததுதான் கொலைக்குக் காரணமா?’ என்று கேட்டார் முல்லா.
ஒட்டகங்களைத் தொந்தரவு செய்யாதே
முல்லா இடுகாட்டில் உலவிக்கொண்டிருந்தார். அப்போது கால்தவறி ஒரு பழைய கல்லறைக்குள் விழுந்துவிட்டார். இறந்துவிட்டால், எப்படியிருக்கும் என்பதைக் கற்பனைசெய்யத் தொடங்கினார். அப்போது திடீரென்று ஒரு சத்தத்தைக் கேட்டார். கடைசித் தீர்ப்பெழுதும் தேவதை தன்னை நோக்கிவருவதைப் போல அவர் மனத்தில் தோன்றியது. ஆனால், அப்போது ஒட்டகக் கூட்டம் ஒன்று அந்தப் பக்கம் சென்றுகொண்டிருந்தது.
கல்லறையில் இருந்து துள்ளிக் குதித்தெழுந்த முல்லா, அருகிலிருந்த குட்டிச்சுவரில் ஏறி விழுந்து ஓடினார்.
அங்கே சென்று கொண்டிருந்த ஒட்டகங்களின் மீது விழுந்து ஒட்டகங்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படுத்தினார். ஒட்டகக்காரர்கள், முல்லாவைத் தங்கள் கைகளில் வைத்திருந்த கழிகளால் அடித்தனர்.
அவர் அந்த இடத்திலிருந்து வலியுடன் தன் வீட்டுக்கு ஓடிச்சென்றார். அவர் மனைவி, என்னவாயிற்று, எதனால் தாமதம் என்று கேட்டார்.
‘நான் இறந்தே போய்விட்டேன்’, என்று சொன்னார் முல்லா. முல்லாவின் மனைவிக்கோ ஆர்வம் அதிகமாகி, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்.
‘அப்படியொன்றும் மோசமில்லை, ஆனால், ஒட்டகங்களை மட்டும் தொந்தரவு செய்யக்கூடாது. ஏனென்றால், ஒட்டகங்களைத் தொந்தரவு செய்தால் அடி விழும்’ என்றார் முல்லா.
- யாழினி