Published : 08 Aug 2019 07:57 AM
Last Updated : 08 Aug 2019 07:57 AM

ஆன்மிக நூலகம்: விடை பெற்ற ராமானுஜர்

ஆன்மிக நூலகம்

‘சுவாமி, நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி உயிருடன் இருப்போம்? இருத்தல் என்பதே சுமையாகிவிடாதா?’ கண்ணீரோடு கேட்ட சீடர்களைக் கருணையுடன் பார்த்தார் ராமானுஜர். ‘அப்படி எண்ணக்கூடாது. பிறவி என்பது கர்மத்தினால் வருவது.

கணக்குத் தீரும்போது யாரானாலும் விடைபெற்றே ஆகவேண்டும். ஆனால் ஒன்று. கிடைத்த பிறவியை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா? அது முக்கியம். நாம் கட்டிக் காக்க நினைக்கும் தருமம் தழைக்கப் பணியாற்றியிருக்கிறோமா என்பது அதனினும் முக்கியம். இருப்பது பற்றியும் போவது பற்றியும் கவலைகொள்வது ஒரு வைணவனின் லட்சணமல்ல. செயல் ஒன்றே நமது சீலம்’ என்றவர், பராசர பட்டரை அருகே அழைத்தார்.

‘பட்டரே, ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் சில காலம் வசித்த ஹொய்சாள தேசத்தில் மாதவாசாரியார் என்றொரு அபாரமான ஞானஸ்தர் இருக்கிறார். அங்கே அவரை வேதாந்தி என்று குறிப்பிடுவார்கள். யாரும் இதுவரை வாதில் வென்றிராத பெரும் பண்டிதர்…’

‘சொல்லுங்கள் சுவாமி. அடியேன் என்ன செய்ய வேண்டும்?’
‘அரங்கன் சாட்சியாக வைணவ தரிசன நிர்வாகப் பொறுப்பை உம்மிடம் கொடுத்திருக்கிறேன். ஞானஸ்தரான அந்த வேதாந்தியை நமது சிந்தாந்தத்துக்குத் திருத்திப் பணிகொள்ளும்.’

‘அப்படியே!’ என்றார் பட்டர். ராமானுஜருக்குப் பின் சிறிது காலம் எம்பாரின் வழிகாட்டலில் மெருகேறி, பொறுப்புக்கு வந்து, தரிசன நிர்வாகப் பணிகளைக் கவனித்து வந்த பட்டர், தனக்குப் பின் அப்பொறுப்பை ஏற்கவிருக்கும் ‘நஞ்சீயர்’ அந்த வேதாந்திதான் என்பதை அப்போது அறியமாட்டார்.
‘திருக்கோயில் பணியாளர்களை வரச் சொல்லுங்கள்’ என்றார் ராமானுஜர். அவர் உருவாக்கிய பணிக் கொத்து ஊழியர்கள்.

தமது முப்பத்தி ஒன்றாவது வயதில் திருவரங்கத்துக்கு வந்து கைங்கர்யப் பொறுப்பை ஏற்றபோது அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களின் மகத்தான பெரும் விளைவு அவர்கள். கோயில் கைங்கர்யங்களில் அனைத்துச் சாதியினருக்கும் அவரளித்த முக்கியத்துவம் தேசத்துக்கே முன்னுதாரணமாயிற்று.
‘வந்துவிட்டார்களா?’

‘ஆம் சுவாமி. இதோ!’ என்று கோயில் ஊழியர்கள் முன்னால் வந்து கரம்குவித்து நின்றார்கள். தன்னலமில்லாமல், பூசல் இல்லாமல், அரங்கன் பணி ஆற்றவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சில சொற்களில் அவர்களிடம் எடுத்துச் சொன்னார். ’நீங்கள் வருந்தும்படி நான் எப்போதாவது நடந்துகொண்டிருந்தால் அதைப் பொறுக்கவேண்டும்!’
ஐயோ என்று அவர்கள் பதறித் தடுத்தார்கள். இன்னொருவர் வாழ முடியுமா இப்படியொரு வாழ்க்கை? ராஜேந்திர சோழன் காலத்தில் ராமானுஜர் பிறந்தார். பிறகு ராஜாதிராஜ சோழன் பட்டத்துக்கு வந்தான். இரண்டாம் ராஜேந்திரனும் வீர ராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் அடுத்தடுத்து வந்தார்கள். முதலாம் குலோத்துங்கன் வந்தான். விக்கிரம சோழன் வந்தான். அடுத்தவன் வந்தான், அவனும் போனான்…

எத்தனை மன்னர்கள்! எத்தனை ஆட்சிகள், நல்லதும் கெட்டதுமாக எத்தனை எத்தனை சம்பவங்கள்! எதிலும் சமநிலை குலையாமல், எத்தருணத்திலும் விட்டுக்கொடுக்காமல், எவர்க்கும் அஞ்சாமல், தன்னெஞ்சு அறிந்ததைத் தயங்காமல் எடுத்துச் சொல்லி, எல்லாக் காலங்களுக்கும் சாட்சியாக இருந்துவிட்டுப் படுத்திருக்கும் பெரியவர்.
‘சுவாமி, உங்கள் சொற்கள் எங்களிடம் இருக்கின்றன. என்றென்றும் உங்கள் ஆசியும் இருக்கப் போகிறது.

கோயில் பணிகள் குறைவற நடக்கும்!’ என்று அவர்கள் நம்பிக்கை சொன்னார்கள்.
‘சரி, அவ்வளவுதானே?’ என்பதுபோல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார் ராமானுஜர். உதட்டில் சிறு முறுவலொன்று பிறந்தது. அந்தப் புன்னகையே அவரது ஆசியாக இருந்தது. மெல்லக் கண்களை மூடிக்கொண்டார். நெஞ்சில் த்வயம் நிறைந்தது.

(ஸ்ரீ ராமானுஜரின் சஅது உபொலிக பொலிக
ரிதம்)
பா. ராகவன்
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 325
தொடர்புக்கு :044- 4200 9603டையவர் பிறந்த அதே பிங்கல வருடம். மாசி மாதம், வளர்பிறை தசமி திதி. திருவாதிரை நட்சத்திரமும்கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x