81 ரத்தினங்கள் 11: முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

81 ரத்தினங்கள் 11: முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
Updated on
1 min read

உஷாதேவி 

அகலிகை ஒரு பேரழகி அவளைத் திருமணம் செய்துகொள்ள தேவேந்திரன் விரும்பினான். ஆனால், நாரத மகரிஷி அகலிகையை கௌதம ரிஷிக்குத் திருமணம் செய்வித்தார். அகலிகையை மணம் முடிக்க வேண்டும் என்றால் உலகை வலம் வரவேண்டும். அதற்குப் பெயர் பூபிரதட்சணம் ஆகும்.

ஆனால், அது சாத்தியமில்லாதது. அதற்குப் பதிலாக நாரதரின் யோசனைப்படி, கௌதமர் ‘கோ பிரதட்சணம்’ (கன்று ஈனும்போது பசுவைப் பார்ப்பது. பசுவின் முகத்தையும் கன்றின் முகத்தையும் சேர்த்துப் பார்ப்பது) செய்து அகலிகையை மணம் முடித்தார். கௌதமரின் மனைவியான அகலிகையை அடைய விரும்பி சிறு மாயாஜாலம் செய்து அகலிகையை இந்திரன் அடைந்துவிட்டான்.

இதை அறிந்த கௌதமர், அகலிகை கல்லாய்க் கிடக்கச் சாபம் கொடுத்தார். சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று அழுத மனைவிக்கு இடைவிடாது ராம நாமம் ஜபிக்கச் சொல்லியும், ராமாவாதாரத்தில் ஸ்ரீராமர் பாதம் பட்டவுடன் நீ பெண்ணாவாய் என்றும் கூறினார். ராமரின் பாத மேன்மையைத் தெரிவிக்க இப்படியொரு சாப விமோசனத்தை இட்டார்.

இறைவனின் பாதம் பிடிக்க வேண்டும். இறைவனின் பாதம் நம் மீது பட ராம நாமம் சொல்லி ஜபிக்க வேண்டும். நம் மனமும் கல்போல் திண்மமாக இருக்கும்; அதை ராம நாமம் சொல்லிக் கரைய வைக்க வேண்டும். பொறுமையாக ஆயிரம் வருடங்கள் கல்லாய் கிடந்து, ராம நாமம் சொன்னாள். ராமர் பிறப்பதற்கு முன்பே ராம நாமம் ஜபித்தாள் அகலிகை.

அகலிகை மீது பட்ட முதலடி

துறவி விஸ்வாமித்திரர், ராம லட்சுமணரோடு தாடகை வதம் முடித்து கௌதமர் ஆசிரமம் வந்தபோது ஸ்ரீராமனின் முதல் அடி அகலிகை மீது பட்டது. முதல்வனின் அடி, தன்மீது பட்டவுடன் அகலிகை பெண்ணாக மாறினாள்.
“கைவண்ணம் அங்கு கண்டேன்
கால்வண்ணம் இங்கு கண்டேன்” என்கிறார் கம்பர்.
கை வண்ணத்தால் தாடகை வதம் செய்து அரக்கியான பெண்ணை அழித்தார். கால் வண்ணத்தால் கல்லான அகலிகையை உயிர்ப்பித்தார். அகலிகையைப் போல இறைவனின் திருவடியை நான் நினைக்கவில்லையே என்று ராமானுஜரிடம் முறையிடுகிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர் : 
uyirullavaraiusha@gmail.com 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in