

ஹோடெய் என்ற குரு ஒரு நாள் ஞானமடைந்தார். அவர் சிரிக்கத் தொடங்கினார். அதற்குப் பின்னர் வாழ்ந்த 30 ஆண்டுகளும் சிரித்துக் கொண்டேயிருந்தார். அவரது உறக்கத்திலும் குழந்தை போல கெக்கலிப்பதை அவருடைய சீடர்கள் கேட்டனர்.
உலகத்துக்கு அவர் சொன்ன செய்தி சிரிப்புதான். சிரித்தபடியே அவர் எல்லா ஊர்களுக்கும் பயணித்தார். அவர் ஓர் ஊரின் சந்தைப் பகுதிக்குச் சென்ற பின்னர், நின்று சிரிக்கத் தொடங்குவார். அவரது சிரிப்பு அனைத்தையும் கடந்ததாக புத்தரின் சிரிப்பைப் போன்றிருந்தது.
அவரது சிரிப்பு தொற்றக்கூடியது. அவரது சிரிப்புச் சத்தத்தைக் கேட்டால் போதும், ஒருவர் சிரிக்கத் தொடங்கிவிடுவார். அவர் நிற்கும் சந்தையில் உள்ளவர்கள் எல்லாரும் சிரிப்பார்கள். அவரிடம் ஒருவர் போய், சிரித்தபடியே இருப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார்.
“எதுவுமே தேவையில்லை. இதுவே போதும். உன்னால் சிரிக்க முடிந்தால், முழுமையாகச் சிரிக்க முடியும். அது தியானம் போன்றது.”
சிரிப்புதான் அவரது கருவி. அவரது சிரிப்பை மட்டுமே கேட்டு பலர் மெய்ஞ்ஞானத்தை அடைந்ததாகக் கூறுவார்கள். சிரிப்பது, மற்றவரைச் சிரிக்கச் செய்வது இரண்டைத் தவிர வேறு எந்தத் தியானத்தையும் அவர் அறியவேயில்லை.
சற்றே விழிப்புடன் இருந்தால் போதும்; நீங்கள் நேசத்தை, ஒளியை, சிரிப்பை எல்லா இடங்களிலும் நீக்கமறக் கண்டறிவீர்கள்.