முல்லா கதைகள்: உயிரைக் காப்பாற்றிய மீன்

முல்லா கதைகள்: உயிரைக் காப்பாற்றிய மீன்
Updated on
1 min read

யாழினி 

முல்லா, ஒருமுறை இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தார். பாழ்மண்டபமொன்றின் வாசலில் துறவி ஒருவர் மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார். முல்லா, அவரிடம் பேசவேண்டுமென்று முடிவுசெய்தார். ‘என்னைப் போல அர்ப்பணிப்புள்ள தத்துவ அறிஞருக்கும், அவரைப் போன்ற துறவிக்கும் பகிர்ந்துகொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்’ என்று நினைத்தார் முல்லா. 

‘நான் ஒரு யோகி. மனிதர்கள் மட்டுமே இந்த உலகின் மையம் அல்ல. பட்சிகள், விலங்குகளும் சேர்ந்தே இந்த உலகை அழகியதாக்குகின்றன. அந்த உலகத்தின் மீதுதான் எனது தியானமும் கவனமும் இருக்கிறது ’ என்று முல்லாவின் கேள்விக்குப் பதிலளித்தார் அந்தத் துறவி. ‘என்னையும் உங்கள் மேலான பணியில் ஈடுபட அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். நமக்குள் ஒத்தகருத்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் உணர்வுகளுடன் என் உணர்வுகளும் தீவிரமாக ஒன்றிபோகின்றன. ஏனென்றால், ஒரு முறை, என் வாழ்வையே சின்ன உயிரினம் ஒன்று காப்பாற்றியது’ என்றார் முல்லா. 

‘எத்தனை அற்புதமான விஷயம்! உங்கள் தோழமையை ஏற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எனக்குப் பிரியமான உயிரினங்களுடன், உங்கள் அளவுக்கு உள்ளார்ந்த உறவைப் பேணும் பேறு எதுவும் கிடைக்கவில்லை. உங்கள் உயிர்க் காப்பாற்றப்பட்டிருக்கிறது. நமது சித்தாந்தமும் ஒட்டுமொத்த விலங்குகள் ராஜ்ஜியத்தின் சித்தாந்தமும் பிணைக்கப்பட்டிருப்பதை இது உறுதிப்படுத்துகிறது’ என்று சொன்னார் யோகி. 
அதனால், சில கடினமான யோகப் பயிற்சிகளைச் செய்தபடி, சில வாரங்களுக்கு அந்த யோகியுடனேயே தன் நாட்களைக் கழித்தார் முல்லா. 

சிறிது நாட்களுக்குப் பிறகு, யோகி முல்லாவிடம், ‘நாம் இப்போது ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொண்டுவிட்டோம். அதனால் உங்கள் உயிரைக் காப்பாற்றிய உயிரியுடனுனான உன்னத அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டால், அதை என் பெருமையாகக் கருதுவேன்’ என்றார். 
‘அந்த அனுபவம் குறித்து என்னால் சரியாக உங்களுக்குத் தெரிவிக்க முடியுமா என்று தெரியவில்லை’ என்று தயங்கினார் முல்லா.

‘குருவே’, என்று முல்லாவின் காலில் விழுந்தார் யோகி. உடனடியாக அந்த உன்னத அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு கெஞ்சத் தொடங்கினார்.  ‘சரி, நீங்கள் இவ்வளவு தூரம் வலியுறுத்துவதால் சொல்கிறேன். அந்த உண்மையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா, முடியாதா என்பதைப் பற்றி இன்னும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. என் உயிரை ஒரு மீன் காப்பாற்றியது. அது  முற்றிலும் உண்மை. நான் அதைப் பிடித்தபோது கடுமையான பசியில் இருந்தேன். எனக்கு அது மூன்று நாட்கள் உணவு வழங்கியது’ என்றார் முல்லா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in