Published : 25 Jul 2019 11:32 AM
Last Updated : 25 Jul 2019 11:32 AM

இறைத்தூதர் சரிதம் 06: நபிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்

சனியாஸ்னைன் கான் 

அந்தக் காலத்தில், குற்றவாளியைத் தண்டிப்பதற்கு, விலங்கின் குடல்களை அவர் தலையில் போட்டுச் சுற்றுவது வழக்கமாக இருந்தது. இந்த வழக்கத்தால், குற்றவாளி மூச்சுத்திணறலாலும் வலியாலும் இறந்துவிடுவார். 
ஒரு முறை, இறைத்தூதர் காபாவில் தொழுகையில் ஈடுபட்டிருந்தார். குரைஷ் தலைவர்களில் ஒருவரான அபு ஜாஹ்ல், துர்நாற்றம் வீசக்கூடிய ஒட்டகத்தின் குடல்களை, தொழுகையில் ஈடுபட்டிருக்கும் இறைத்தூதரின் மீது வீசினார். அவை அவரின் தலையிலும் தோள்களிலும் விழுந்தன. 

அபு ஜாஹ்ல், குடல்களால் இறைத்தூதரின் கழுத்தை இறுக்கக் கட்டினார். 
அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு இறைத்தூதர் முயற்சி செய்தார். ஆனால், அவரால் முடியவில்லை. அவர் பெரும் வலியிலும் வேதனையிலும் மூச்சு விடமுடியாமல் அவதிப்பட்டார். 
இறைத்தூதருக்கு உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஏனென்றால், அபு ஜாஹ்லைப் பார்த்து அனைவரும் பயந்தனர். 

இறைத்தூதரை இந்த நிலைமையில் பார்த்த பெண் ஒருவர், அவர் வீட்டுக்குச் சென்று அவருடைய மகள் ருக்கய்யாவிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்தார். ருக்கய்யா அழுதபடி காபாவுக்கு ஓடினார். அங்கே, அவரது அப்பா உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். 

அபு ஜாஹ்லும், அவரது நண்பர்களும் இறைத்தூதரைச் சுற்றி நின்று கிண்டலடித்து கொண்டிருந்தனர். ருக்கய்யா வருவதைப் பார்த்த அவர்கள், அவருக்கு வழிவிட்டனர். 
ருக்கய்யா, உடனடியாகத் தனது அப்பாவின் மீதிருந்த குடல்களை விலக்கினார். அவரது முகம், தலையைத் தன் ஆடையால் துடைத்துவிட்டார். 

இறைத்தூதர் ஒரு மணிநேரத்துக்கு மேலாக அங்கே பேச்சு மூச்சற்று இருந்தார். பிறகு, ருக்கய்யாவின் உதவியால் அவர் மெதுவாக எழுந்து வீட்டுக்கு நடந்துசென்றார். அடுத்த நாள், எதுவுமே நடக்காத மாதிரி, மீண்டும் வழக்கம்போல் காபாவுக்குச் சென்றார் இறைத்தூதர். 
இறைத்தூதரின் உறுதியைப் பார்த்த குரைஷ் தலைவர்கள் மீண்டும் வேறொரு திட்டம் தீட்டத் தொடங்கினர். 

உத்பாவின் சூழ்ச்சி

வழக்கம்போல், இறைத்தூதர் காபாவில் தொழுகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது உத்பா என்ற நபர் காபாவுக்குள் நுழைந்தார். அவர் கையில் துணிகளை வைத்திருந்தார். அவர் செருப்பில்லாமல் நடந்துவந்ததால், அவரின் காலடியோசை இறைத்தூதருக்குக் கேட்கவில்லை. தொழுகையில் ஈடுபட்டிருந்த இறைத்தூதர், வணங்குவதற்காகக் கீழே குனிந்தபோது, அவர் தலையின் மீது துணியைப் போட்டு இறுக்கக்கட்டினார் உத்பா.

அதற்குப் பிறகு, இறைத்தூதரைக் கடுமையாக அவர் தாக்கினார். இதனால் இறைத்தூதரின் முகத்திலும் மூக்கிலும் ரத்தம் வழிந்தது. சிறிது நேரப் போராட்டத்துக்குப் பிறகு, உத்பாவில் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் இறைத்தூதர். மிக மோசமாக ரத்தம் வழிந்தபடி வீட்டுக்குச் சென்றார் அவர். இறைவனின் செய்திப் பரவுவதைத் தடுப்பதற்காகக் குரைஷ் இனத்தவர் இந்த மாதிரி பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால், எல்லா விதமான முயற்சிகளுக்குப் பிறகும், அவர்களால் இறைத்தூதரின் பணிகளை நிறுத்த முடியவில்லை. 

(பயணம் தொடரும்) 
தமிழில்: 
என். கௌரி
ஓவியம்: குர்மீத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x