Published : 25 Jul 2019 11:11 AM
Last Updated : 25 Jul 2019 11:11 AM

தெய்வத்தின் குரல்: விநாயகர் செய்த வேடிக்கைகள்

விக்நேச்வரர் நிறைய விகடம் பண்ணுபவர். அப்பா, அம்மா சாக்ஷாத் பார்வதி பரமேச்வராள் ஊடல் பண்ணிக் கொண்டு கோபமும் தாபமுமாக இருக்கும்போது அவர் ஏதாவது வேடிக்கை, குறும்பு பண்ணி அவர்களை ஒன்று சேர்த்துவிடுவார்.

காக்காயாகப் போய் அகஸ்தியரை விகடமாக ஏமாற்றி நமக்குக் காவேரி கிடைக்கும்படிப் பண்ணுவார். பிரம்மச்சாரியாகப் போய் விபீஷணரை ஏமாற்றி காவேரி தீரத்தில் ரங்கநாதர் ப்ரதிஷ்டை யாகும்படி லீலை பண்ணுவார். கோகர்ண க்ஷேத்ரத்திலே அவனுடைய அண்ணாவான ராவணனையும் இதேமாதிரி அவர் ஏமாற்றி விளையாட்டுப் பண்ணித்தான் சிவலிங்கம் பிரதிஷ்டையாகும்படிச் செய்திருக்கிறார். இதெல்லாம் விகடர் பண்ணின நடைமுறை விகடங்கள்.

அருள் லீலை

ஒரு அகஸ்தியர், ஒரு ராவணன், ஒரு விபீஷணன் ஏமாந்தாலும், இந்த லீலைக்கெல்லாம் நோக்கம், இந்த லீலைகளுடைய விளைவு லோக கல்யாணம்தான். காவேரியும், ரங்கநாதரும், கைலாஸ லிங்கமும் யாரோ ஒரு தனி மனுஷ்யருக்கு உடைமையாக இல்லாமல் லோகம் முழுவதற்கும் பிரயோஜனப்படுகிற விதத்தில் அவர் செய்த அருள் லீலை! விகடமாகப் பண்ணிவிட்டார்!

‘கள்ளவாரணப் பிள்ளையார்’ என்று அவருக்குத் திருக்கடையூரில் திருட்டுப் பேரே இருக்கிறது. தப்புப் பண்ணிய தேவர்களிடமிருந்து அமிர்தக் கலசத்தை ‘அபேஸ்’ பண்ணிவிட்டு, அப்புறம் அவர்கள் தங்கள் தப்பைத் தெரிந்துகொண்டு பூஜை பண்ணிய பிறகு, அதைக் கொடுத்தவர் அவர். இப்படி அநேக க்ஷேத்ரங்களில் விகடங்கள் பண்ணி, வேடிக்கை வேடிக்கையாய்ப் பெயர் வாங்கியவர்.

‘கடுக்காய்ப் பிள்ளையார்’ என்று இப்படியொருத்தர். திருவாரூருக்குத் தெற்கே திருக்காறாயில் என்று ஒரு சப்தவிடங்க க்ஷேத்ரம்; அதாவது தியாகராஜர் ஏழு விதமான நாட்டியமாடும் ஏழு ஸ்தலங்களில் ஒன்று. அந்த ஊருக்கு ஒரு வியாபாரி ஜாதிக்காய் மூட்டைகள் விற்பனை பண்ணுவதற்காக வாங்கிக் கொண்டு வந்தான். ஜாதிக்காய்க்கு வரி உண்டு. அதனால் அவன் ‘டோல்கேட்’ என்ற சுங்கச் சாவடியில் கடுக்காய் மூட்டை எனறு பொய் சொல்லி - முன்னேற்பாடாக வண்டியில் முன்னாடியும் பின்னாடியும் கடுக்காய் மூட்டைகளும் போட்டுக் கொண்டு வந்திருந்தான்; அதனால் அப்படிச் சொல்லி - வரியை ஏமாற்றிவிட்டு, கொண்டு வந்து விட்டான்.

விக்நேச்வரர், நியாயம் தப்பினால் தண்டனை கொடுத்து விடுவார். அதையும் விகடமாகப் பண்ணிவிடுவார். அதனால் நிஜமாகவே ராவோடு ராவாக எல்லா மூட்டைகளில் இருந்ததையும் கடுக்காயாகவே மாற்றிவிட்டார். மறுநாள் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வியாபாரி, “ஐயோ!” என்று உட்கார்ந்து விட்டான். அப்புறம் புத்தி வந்து பிள்ளையாருக்கு வேண்டிக்கொண்டு, கடுக்காய் மறுபடி ஜாதிக்காயானால் அதற்குண்டான வரியும், வரிக்கு மேல் அபராதமும் கட்டுவதாக ஒப்புக்கொண்டான். அவரும் மனம் இறங்கி கடுக்காயை மாற்றிப் பழையபடியே ஜாதிக்காயாகப் பண்ணினார். தித்திக்கும் மோதகப் பிள்ளையாருக்கு அங்கே கடுக்காய்ப் பிள்ளையாரென்று பேர் வந்துவிட்டது.

கரும்பாயிரப் பிள்ளையார்

கடுக்காய்க்கு நேர் எதிர் கரும்பு. ஒரு கரும்பில்லை, ஆயிரம் கரும்பைப் பெயரில் வைத்துக் கொண்டு, ‘கரும்பாயிரப் பிள்ளையார்’ என்று கும்பகோணத்தில் ஒருத்தர். கும்பேச்வர ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கே அவருடைய கோயிலிருக்கிறது. ஏன் அப்படிப் பேர், என்ன கதை என்றால்: ஆதியில் அவருக்கு வராஹப் பிள்ளையாரென்று பெயராம். வராக அவதாரத்தின்போது பகவான் அவரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை ஹிரண்யாக்ஷனிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்ததால் வராஹப் பிள்ளையார் என்று பெயராம். அந்தப் பிள்ளையார் கோயில் வாசலில் ஒருநாள் ராத்திரி ஒரு கரும்பு வண்டிக்காரன் ஆலைக்குச் சரக்கு எடுத்துப் போகிற வழியில் தங்கினானாம். வண்டியில் ஆயிரம் கரும்பைக் கட்டுக் கட்டாகப் போட்டிருந்ததாம்.

விக்நேச்வரருடைய வாசம் கருப்பஞ்சாற்று சமுத்திரத்துக் குள்ளேதான். கைலாசம், வைகுண்டம் மாதிரி அவருக்கென்று ஒரு லோகம் உண்டு. ஆனந்த ஸ்வரூபமான அவருடைய அந்த லோகத்தின் பெயர் ஆனந்த புவனம். மஹாவிஷ்ணு க்ஷீரஸாகரத்தில் சயனித்துக்கொண்டிருக்கிறார். அம்பாள் அமிர்த சாகரத்துக்குள் இருக்கிற மணி த்வீபத்தில் இருக்கிறார். பிள்ளையாருடைய ஆனந்த புவனத்தைச் சுற்றி இக்ஷுஸார ஸாகரம், அதாவது கருப்பஞ்சாற்றுக் கடல் இருக்கிறது. அவர் ரொம்பவும் இனியவர் என்பதைக் கையிலிருக்கும் மோதகம் மட்டுமில்லாமல் அவரைச் சூழ்ந்திருக்கும் பெரிய சமுத்திரமே தெரிவித்துவிடுகிறது! அவரிடமிருந்தே கருப்பஞ்சாறு மாதிரி மத ஜலம் பெருகிக் கொண்டிருக்கும் என்றும், வண்டுக் கூட்டம் வந்து மொய்க்கும்.

கருப்பங்கடலுக்கு நடுவிலிருப்பவர் வேடிக்கையாக ஒரு பாலப்ரம்மச்சாரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து வண்டிக்காரனிடம் ஒரு கரும்பு கேட்டாராம். தரமுடியாது என்று அவன் சொன்னானாம். போகிறவர்கள் வருகிறவர்கள், “வண்டி நிறைய இவ்வளவு வெச்சுண்டிருக்கே, அந்தக் குழந்தை வாயைத் திறந்து கேக்கறச்சே ஒன்று குடுக்கப்படாதா?” என்றார்களாம். ஏதாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளணுமென்று அவன், “இது ஒரு தினுஸுக் கரும்பு. அப்படியே சாப்பிட்டா கரிக்கும். ஆலையில் காச்சி வெல்லம் எடுக்கறப்போதான் தித்திப்பாகும்” என்று அளந்தானாம்! “அப்படியா?” என்று அவர்கள் போய்விட்டார்களாம். “அப்படியா?” என்று பிள்ளையாரும் சிரித்துக் கொண்டாராம்.

உங்களுக்கே புரிந்திருக்கும் - மறுநாள் அத்தனை கரும்பும் ஒரே கரிப்பாக கரிக்க ஆரம்பித்து விட்டதாம். ஆலையில் அவன் கரும்பைக் கொண்டு போய் இறக்கிய வுடன் அந்த விஷயம் தெரிந்தது. பிள்ளையார் கோயில் வாசலில் வந்து கரும்பு கேட்ட பிரம்மச்சாரி யாரென்று அவனுக்குப் புரிந்தது. ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டு வேண்டிக் கொண்டானாம். சுவாமியும் அனுக்ரஹம் பண்ணிக் கரும்பெல்லாம் பழையபடி தித்திப்பாக மாற்றினாராம். வராஹப் பிள்ளையார் என்ற பேரும் கரும்பாயிரப் பிள்ளையார் என்று மாறிற்று.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)Sign up to receive our newsletter in your inbox every day!

 
x