

முனைவர் கே.சுந்தரராமன்
ஐதராபாத் இண்டிக் அகாடமியின் இன்டர்-குருகுலா பல்கலைக்கழக மையம், நாக்பூரில் உள்ள பாரதிய சிக்ஷன் மண்டல் என்ற அமைப்புடன் இணைந்து வாராணசி சம்ஸ்கிருத சம்பூர்ணானந்த் பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச வாக்யார்த்த சதஸ், ஜூலை 12-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. இந்தியா, பூட்டான், நேபாள நாட்டு வேத விற்பன்னர்கள் பலரும் கலந்தகொண்டு சாஸ்திரங்களில் உள்ள ஆழ்ந்த கருத்துகளை எடுத்துரைத்தனர்.
வியாக்கரண சாஸ்திரம், நியாய சாஸ்திரம், மீமாம்ஸா சாஸ்திரம், பிராசீன நியாய சாஸ்திரம், ஜோதிடம், கணிதம், வைசேஷிகம், யோக சாஸ்திரம், ஆயுர்வேதம், த்வைத வேதாந்த சாஸ்திரம், அத்வைத வேத சாஸ்திரம், அத்வைத வேதாந்த சாஸ்திரம் ஆகிய 11 சாஸ்திரங்களின் அடிப்படையில் 11 அமர்வுகளை நடத்தப்பட்டன.
இதில் 30 பேர் 30 தலைப்புகளில் 150-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் முன்னிலையில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ஜூலை 12-ம் தேதி காலை 7 மணி அளவில் பல்கலைக்கழக அரங்கில் வாக்தேவி பூஜையுடன் சதஸ் தொடங்கியது. சர்வதேச வாக்யார்த்த சதஸ் குறித்து இண்டிக் அகாடமியின் இன்டர்-குருகுலா பல்கலைக்கழக மைய இயக்குநர் நாகராஜ படூரி கூறியதாவது, “அமர்வின் தலைவர் ஒரு சாஸ்திரத்தில் இருந்து ஒர் அறிக்கையைக் கூறி அதற்கு மாற்றுக் கருத்து உள்ளதைப் பற்றியோ அல்லது அதுகுறித்து ஆய்வு செய்வதற்கு பல்வேறு களங்கள் உள்ளன என்று கூறியோ ஒரு விவாதத்தைத் தொடங்கி வைப்பார்.
அந்த விவாதப் பொருளை மையமாக வைத்து அந்த அமர்வில் பங்கு பெறும் சிறப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் தங்கள் பதிலையோ அல்லது கருத்தையோ முன்வைப்பர். இறுதியில் அமர்வின் தலைவர் அனைத்து தரப்பு வாதங்களையும் ஏற்று ஒருமுகப்படுத்தி தனது முடிவை அறிவிப்பார். இதுதான் வாக்யார்த்தா என்பதன் பொருள். இது போன்று பல சதஸ்களை நடத்துவதால் சாஸ்திரங்களின் சிறப்பு அம்சங்களையும் அதன் ஆழ்ந்த கருத்துகளையும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்” என்றார்.
குருகுலம் தொடங்கி சதஸ் வரை
ராஜமுந்திரி சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வரும் வாக்யார்த்த சதஸின் தலைவருமான வேத விற்பன்னர் கோபால கிருஷ்ண சாஸ்திரி கூறும்போது, “பண்டைய நாளில் குருகுலம் முறை இருந்தது. இப்போது அந்த முறை குறைந்துவிட்ட காரணத்தால், இதுபோன்ற சதஸ் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் கற்பதன் பயனை உணர்ந்து, தங்கள் அறிவை மேலும் உயர்த்திக் கொண்டு ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வளர்ச்சி காண்பார்கள்’ என்றார்.
இதுகுறித்து சதஸில் கலந்து கொண்ட நேபாள நாட்டைச் சேர்ந்த லஷ்மண சாஸ்திரி கூறும்போது, “நான் இந்தியா வருவது இதுவே முதல் முறை. எனது தாத்தா, தந்தை அனைவரும் சம்ஸ்கிருத வித்வான்கள். அவர்கள் வழியில் நானும் சம்ஸ்கிருதம் பயின்றேன். ஆச்சார்யா பட்டம் பெற்றேன். வாராணசியில் நடைபெறும் இந்த சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற வேத விற்பன்னர்கள் கூடியுள்ள சபையில் எனது வாதத்தை முன்வைப்பதால், அந்த சாஸ்திரத்தில் உள்ள முக்கிய அம்சங்களையும், ஆழ்ந்த கருத்துகளையும் உணர முடிகிறது” என்றார்.
பாடத்திட்ட உருவாக்கம்
தனுர்வேத ராஜ்ய சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேத குருகுலங்களுக்கு பாடத்திட்ட உருவாக்கம் குறித்த 3 நாள் பயிலரங்கமும் சம்ஸ்கிருத அஷ்டாவதனம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. யக்ஞசாலா வேத ஆய்வுத் துறை அரங்கில் ராஷ்ட்ர – மித்ரவிந்தா இஷ்டி (யாகம்) என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
படங்கள் : கே.சுந்தரராமன்