

டேவிட் பொன்னுசாமி
கிறிஸ்து பிறந்து மறைந்து கிறிஸ்துவ சமயம் நிலைபெறத் தொடங்கிய காலகட்டத்தில் அறியப்பட்ட இறையியலாளர் களில் ஒருவர் புனித அகஸ்டின். ஹிப்போவின் பிஷப் என்று அழைக்கப்படும் புனித அகஸ்டின் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். ஆப்பிரிக்காவில் ரோமானிய ஆதிக்கத்தில் இருந்த பகுதி அது. விவிலியம் நடைமுறைக்கு வருவதற்குக் காரணமாக அவர் எழுதிய நூல்களான ‘கன்பெஷன்ஸ்’, ‘சிட்டி ஆப் காட்’ கருதப்படுகின்றன.
புனித அகஸ்டினின் வாழ்வை வடிவமைத்த முக்கியமான சம்பவம் ஒன்றைத் தனது ‘கன்பெஷன்ஸ்’ நூலில் பகிர்ந்துள்ளார். பயனேயில்லாமல் சில வேளைகளில் பொய்களைச் சொல்கிறோம். தேவையேயற்றுச் சில பொருட்களைத் திருடுகிறோம். அந்தச் செயல்களுக்கான பின்னணி என்னவென்பதை நம்மால் அறிய முடிவதேயில்லை. அது தொடர்பான ஒரு சம்பவம்தான் புனித அகஸ்டின் வாழ்க்கையிலும் நடந்தது.
அகஸ்டின் தனது வளரிளம் பருவத்தில், நண்பர்களோடு தெருவில் நடந்தபோது, பேரிக்காய் தோப்பொன்றைப் பார்த்தார். அவருக்கோ பசியே இல்லை. ஆனாலும், குற்றம், குறும்பின் சுவையால் ஈர்க்கப்பட்டு பேரிக்காய் மரங்களில் பழுக்காத பேரிக்காய்களை ஓடி ஓடிப் பறித்தனர். ஒவ்வொன்றாகத் தின்று பார்த்தபோது, பேரிக்காய்கள் கசந்தன. உடனடியாக வேறு வழியின்றி பேரிக்காய்களை, வெளியே வந்து பன்றிகளுக்குப் போட்டுவிட்டுச் சென்றனர்.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமென்னவென்று தனது நூலில் அகஸ்டின் ஆராய்கிறார். அன்பு கடவுளுக்குரியது. காமம் என்பது குற்றத்தால் அன்புக்குச் செய்யும் தொந்தரவு என்று அந்தச் செயலை விளக்குகிறார் அகஸ்டின். தானும் நண்பர்களும் சேர்ந்து திருடிய ஒவ்வொரு பேரிக்காயும் அன்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கிறார். அன்பின் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலும் கடவுளைப் போல ஆகவிரும்பும் செயல்தான் என்கிறார்.
இப்படித்தான் நாம் செய்யும் பெரும்பாலான குற்றங்கள் பேரிக்காய் திருட்டைப் போலச் சிக்கல்களற்றவை. மிகச் சிறிய சந்தோஷங்களுக்காக நம் மதிப்பை இழக்கிறோம். புனித அகஸ்டின் பெரிய பலனே அற்ற, தூய்மையான குற்றம் ஒன்றில் சிறுவயதில் இறங்குகிறார். ஏவாள் செய்த குற்றத்தின் அளவுடன் ஒப்பிடும்போது அது பெரிய குற்றமல்ல. நல்லது, கெட்டதை அறியும் ஆசையும் அகஸ்டினுக்கு இல்லை. ஒரு குற்றத்தைச் செய்யும் சாகசம் மட்டுமே அந்தச் சிறுவனுக்கு இருந்துள்ளது.
அகஸ்டின் அந்தச் செயலின் விளைவிலேயே வீழ்ந்தும் போகவில்லை. அந்தச் செயலால் ஏற்பட்ட தெய்விக நிம்மதியின்மைதான் அவரை இறைவனைத் தேடிப் போகவைத்தது. பேரமைதியையும் பெரும் நிம்மதியையும் அடைவதற்கு இதுபோன்ற சம்பவங்களும் தேவை என்பதை புனித அகஸ்டினின் வாழ்க்கை உணர்த்துகிறது.