

சிந்துகுமாரன்
(ஏற்கெனவே இரண்டு வாரங்கள் ‘காலம்’ என்னும் பொருள் பற்றிப் பல கோணங்களில் ஆலோசித்தோம். இந்த வாரத்துடன் இந்த விஷயம் நிறைவு பெறுகிறது). உலகின் தொடக்கத்தில், நம் முன்னோரில் பெரும்பாலானோர் ஏதுமறியாத நிலையில் இருந்த காலத்தில், சில பெருமனங்கள் இருந்திருக்கின்றன. அனைத்தையும் ஆழ்ந்து கண்டறிந்தவர்கள் அவர்கள். அவர்கள்தாம் மனித மனத்தை, அதன் கட்டமைப்பை, நிர்மாணித்தவர்கள் என்றுகூடச் சொல்லலாம். காலம் பற்றிய அவர்களின் பார்வை பெரும் பிரமிப்பை உண்டாக்குகிறது.
இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா என்று நம் மனம் அதிசயிக்கிறது. சிந்தித்திருக் கிறார்கள்; கண்டறிந்திருக்கிறார்கள்.
பிரம்மாவின் காலம் என்று ஒரு கணக்கு உண்டு. யுகங்கள் நான்கு என்று நாம் அறிவோம்: கிருதயுகம், துவாபரயுகம், திரேதாயுகம், கலியுகம். இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு மகாயுகம். ஒரு மகாயுகம் அளவுக்குப் பிரபஞ்சம் நிலைத்து இயங்கும். அது பிரம்மாவின் ஒரு பகல். பிறகு பிரளயத்தில் பிரபஞ்சம் முற்றிலும் அழிந்து போய், ஒரு மகாயுகம் அளவுக்கு எதுவும் இருக்காது. அது பிரம்மாவின் ஒரு இரவு. இவை இரண்டும் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு நாள். பிரும்மாவின் ஒரு நாள் என்பது நம் கணக்கின்படிப் பல கோடி ஆண்டுகள். அடுத்ததாக, பிரம்மா என்பது ஒரு நபரல்ல. அது ஒரு பதவி. பல பிரம்மாக்கள் இருந்திருக் கிறார்கள். இன்னும் இருப்பார்கள். இப்படிப் போகிறது காலக் கணக்கு!
காலம் என்னும் உணர்வு
இப்போது வேறு கோணத்தில் இந்த விஷயத்தைப் பார்க்கலாம். அனுபவவெளியில் (பிரக்ஞையில்), பொருட்களின் அசைவுதான் காலம் என்னும் உணர்வைத் தோற்றுவிக்கிறது. அங்கே இருந்த சைக்கிள் இப்போது இங்கே இருக்கிறது என்றால், இடையில் காலம் கடந்திருக்க வேண்டும். அதாவது வேறு வகையில் சொல்வ தென்றால், ஒன்றுமே இல்லாத, ஒன்றுமே நடக்காத உலகில் காலம் என்னும் உணர்வே இருக்காது.
நம் உணர்வுநிலை அல்லது பிரபஞ்சம், பல தளங்கள் கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் அதற்கேற்ப வெவ்வேறு சக்திகள் இயக்கம் கொள்கின்றன. உயர்ந்த தளத்தில் இருப்பவருக்கு அதற்குக் கீழே உள்ள தளங்களில் நடப்பதென்னவென்று தெளிவாகத் தெரியும். உதாரணமாக நல்ல உயரமான ஒரு கட்டிடத்தின் மேல் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
உங்களால் எல்லாத் திசைகளிலும் வெகு தூரத்துக்குப் பார்க்க முடியும். மேற்கிலிருந்து ஒரு கார் வந்துகொண் டிருக்கிறது. கிழக்கிலிருந்து ஒரு மோட்டார் பைக் வருகிறது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாது. ஆனால், உங்களால் இருவரையும் பார்க்க முடியும். அவர்கள் வரும் வேகத்தைக் கொண்டு இன்னும் இருபது நிமிடங்களில் அவர்கள் இருவரும் இந்த இடத்தில் சந்தித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று உங்களால் சொல்லிவிட முடியும் இல்லையா? அவர்களை செல்போனில் அழைத்து, ‘இன்னும் இருபது நிமிடங்களில் நீங்கள் இந்த இடத்தில் சந்திக்கப் போகிறீர்கள்' என்று சொல்கிறீர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அது எதிர்காலத்தில் நடக்கப்போவதை நீங்கள் முன்கூட்டியே சொல்வதாகத்தானே இருக்கும்? உங்களை அதிசயமாகத்தானே பார்ப்பார்கள்?
அதேபோல் உயர்ந்த தளங்களில் காலத்தின் வேகமே வேறாக இருக்கும்போது, கிருஷ்ணரின் பத்து நிமிடத்தில் நாரதருக்குப் பல ஆண்டுகள் ஆவதில் என்ன அதிசயம் இருக்கிறது? நாரதர் குடிசை வாசலில் அந்தப் பெண்ணைப் பார்த்த உடனேயே கிருஷ்ணருடன் கூட இருந்த தளத்தை மறந்துபோய் வேறு தளத்துக்கு இறங்கிவிடுகிறார் என்றுதானே அர்த்தம்?
உண்மையை அறிந்துகொள்ளும் சாத்தியம்
இதேதான் பக்கிரி-சுல்தான் கதையிலும். காலம் என்பது புறவயமான, தன்னளவில் இருப்புள்ள ஒரு விஷயம் என்று சுல்தானும் மற்றவர்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே வந்த பக்கிரி, காலம் என்பது அனுபவத் தளத்தை வைத்துத்தான் நிர்ணயமாகிறது என்று காட்டுகிறார். அதுபோல், மனைவி தேநீர் தயாரிக்கிறாள். கணவன் உலாவச் செல்கிறான். அங்கே அவன் வேறோர் உணர்நிலைத் தளத்துக்கு நிலை மாறுகிறான். கடவுளுடன் பேசிக்கொண்டு உலாவுவதாக அவனுக்கு அனுபவம் ஏற்படுகிறது. அதனால் காலகதி வேறாகிப் போகிறது. மனைவி தேநீர் தயாரிக்கும் அதே நேரத்தில் அவன் கடவுளுடன் பல்லாயிரம் ஆண்டுகள் உரையாடிவிட்டு வருகிறான்.
இந்தக் கதைகளிலிருந்து காலம் என்பது புறவயமானதல்ல என்னும் உண்மை வெளிப்படுகிறது. இந்த உண்மையை அறிந்துகொள்ளும் போதுதான் காலமற்ற பேருண்மையை அறிந்துகொள்ளும் சாத்தியமே தோன்றுகிறது. தொடக்கம்-இருப்பு-முடிவு என்று இருக்கும் எதுவும் காலத்துக்கு உட்பட்டது. சூரியன் போன்ற நட்சத்திரங்கள் பல கோடி ஆண்டுகள் இருக்கின்றன. ஆனாலும், அவற்றுக்குத் தொடக்கமும் முடிவும் உண்டு. அவை காலத்துக்கு உட்பட்டவையே.
காலமென்னும் நதி என்று காலத்துக்கு நதியின் ஓட்டத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். நதியின் ஓட்டத்தில் மூன்று காலங்களும் இணைகின்றன.
கடந்துபோனது, இப்போது இருப்பது, இனி வரப்போவது, மூன்றையும் ஒரே நேரத்தில் அனுபவம் கொள்ள முடிவது நதியில்தான். பல்லாயிரம் மைல் நீளம் கொண்ட நதி பல ஊர்களைக் கடந்து ஓடுகிறது. நாம் ஓர் ஊரில் அந்த நதியின் கரையில் நிற்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு புறமிருந்து நதி பாய்ந்து நம்மிடம் வருவதைப் பார்க்கிறோம். நம் கண்ணெதிரே நதி சுழித்தோடுகிறது. மறுபுறம் ஓடிக் கடந்து போய்விடுகிறது.
இக்கணம் நதியின் தோற்றுவாயில், நதி பிறந்துகொண்டு இருக்கிறது. இதோ, இப்போது இங்கே ஓடுகிறது. கழிமுகத்தில் இக்கணத்திலேயே கடலில் போய்ச் சேர்ந்துகொண்டி ருக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்கும்போது நதி இன்னும் தொடங்கவேயில்லை. இங்கே இப்போது ஓடிக்கொண்டி ருக்கிறது. வேறொரு பார்வையில் நதி எப்போதோ கடலில் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.
காலம் இன்னும் தொடங்க வில்லை. அதனால் எதிர்காலத்தில் இருக்கிறது. இப்போது நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. நிகழ்காலத்தில் இருக்கிறது. கடந்துபோயாகிவிட்டது. இறந்த காலத்தில் இருக்கிறது. கடந்தது-இருப்பது-வருவது மூன்றும் ஒருங்கே, ஒரே நேரத்தில் ‘இருப்பது’தான் காலம்.
எது காலமாக இருக்கிறது என்பதுதான் அடிப்படைக் கேள்வி. காலமற்றதுதானே காலமாகத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முடியும்? காலம் என்பது நகர்வு. நகராததன் பின்னணியில்தான் நகர்வை மனம் உணர முடியும். காலமற்றது அசைவில்லாத பின்னணி. அதன் முன்னே நகர்கிறது காலம்.
உணர்வுவெளிதான் ‘உள்ளது’; அது உள்ளீடில்லாதது; அதன் சுயத் தன்மையில் பொருள் எதுவும் இல்லை. அங்கு எதுவும் நடக்கவில்லை. அதனால் காலம் இல்லை. உண்மையில் ‘இப்போது’ மட்டும்தான் எப்போதும் இருக்கிறது. ‘இப்போதில்’ இருந்து கொண்டுதான் மனம் இறந்தகாலம் பற்றி ‘நினைக்கிறது’; எதிர்காலம் பற்றிக் ‘கற்பனை’ செய்கிறது. காலம் நினைவுகள் சார்ந்த மனத்தில்தான் இருக்கிறது. காலமாக நிற்கும் மனம், உணர்வெளியில் காலமற்று மிதக்கிறது. இல்லாத காலம் இருப்பதாகத் தெரிவதுதான் காலத்தின் மாயை!
(அறிதல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு :
sindhukumaran2019@gmail.com