

பவி
ஒரு வீடு தீப்பற்றி எரிந்தது. அதன் உரிமையாளரான கிழவர், அதைப் பார்த்துப் பதறி, நெஞ்சிலடித்துக் கொண்டு அழுதார். அவர் அழுவதைப் பார்த்த ஒருவன், “ஏன் இத்தனை துயரம் கொள்கிறீர்கள். உங்கள் மகன் நேற்று இந்த வீட்டை நல்ல விலைக்கு இன்னொருவருக்கு விற்றுவிட்டான்.” என்று கூறினார்.
அந்த மனிதர் உடனடியாக அழுகையை நிறுத்தினார். அந்த வீடு இன்னும் பற்றி எரிந்துகொண்டுதானிருந்தது. ஆனால், கிழவர் அந்த வீட்டை ஒரு தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர் மகன் ஓடோடி வந்தான். “நான் இன்னும் வீடு விற்ற பணத்தைப் பெறவில்லையே. அதற்குள் இப்படி ஆகிவிட்டதே.” என்றான்.
கிழவர் மீண்டும் அழத் தொடங்கினார். சந்தோஷம், துக்கம் என மாறும் இரண்டு உணர்வுகளும் அதைச் சுமக்கும் மனிதர்களுக்குத்தான். வீடு முன்னரும் எரிந்து கொண்டிருந்தது. இப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது.
எல்லாம் வெளியே நடந்து கொண்டிருக்கிறது. நாம்தான் நெருக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். கொஞ்சம் தள்ளி வாருங்கள்.