

முனைவர். தா.அனிதா
உலகின் பல்வேறு பகுதிகளில் பலவிதமான வடிவங்களில் கணபதி அருள்பாலிக்கிறார். திருவனந்தபுரத்துக்குக் கிழக்கே கோட்டையினருகே, பழவங்காடி கணபதி கோயில், இந்திய ராணுவத்தின் ஒருபிரிவான மதராஸ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வணங்கியதால் இவர், ரெஜிமென்ட் வினாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
பெருமாள், அனந்த சயனத்தில் கோலம் கொண்ட பத்மநாபசுவாமி கோயிலுக்கு வடக்கே பழவங்காடி கணபதி கோயில் உள்ளது.
தம்பானுர் ரயில் நிலையத்திலிருந்து, நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு நேரே எதிர்திசையில் பழவங்காடி வெட்டிமுறிச்ச கோட்டை உள்ளது. பத்மநாபசுவாமி கோட்டையையும் இன்னபிற கோட்டைகளையும் நிர்மாணிக்கும்போது, பழவங்காடி கோட்டையும் கட்டப்பட்டது. இக்கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் கொண்டுவருவதற்காக இக்கோட்டை நொறுக்கி உடைத்து உருவாக்கப்பட்டதால், ‘வெட்டிமுறிச்ச கோட்டை’ என்றானது என்று கூறுகிறார்கள். கோயில் கட்டுவதற்கான கற்களானது, கிள்ளியாற்றிலே கல்லன்பாறை என்ற பாறையிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும்.
தமிழ்க் கோயில்களின் அமைப்பு
இக்கோயில் அமைப்பானது தமிழ்நாட்டிலுள்ள புராதனக் கோயில்களின் கட்டிட அமைப்பைப் பின்பற்றியதாகும். 1860-ம் ஆண்டு ஆயில்யம் திருநாள் மகாராஜா ஆட்சியின்போது இக்கோயில் கட்டப்பட்டது. மூலவரான கணபதி வலது காலை மடக்கிய நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் இருக்கிறார். அய்யப்பன், துர்க்கையம்மன், நாகராஜா, பிரம்மராக்ஷஸ் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
கோயிலின் உட்பகுதி சுவர்களில் கணபதி 32 வேறுபட்ட வடிவங்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளார்.
ஆற்றில் கிடைத்த சிலை
வேணாடு மன்னர்கள் தற்போதைய குமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த போது அங்குள்ள நாயர் பட்டாளத்திலுள்ள பணியாளர்கள் ஆற்று நீரில் நீராட செல்லும்போது ஒருநாள் வலது காலை மடக்கிய நிலையிலுள்ள ஒரு கணபதி சிலை கிடைத்தது. அதை எடுத்துவந்து கோட்டையினுள் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
வேணாடு விரிவடைந்து திருவிதாங்கூர் ராஜ்யமாக மாற்றப்பட்டு, 1795-ம் ஆண்டு, கார்த்திகை திருநாள் மகாராஜா தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றியபோது பழவங்காடியில் கோயில் கட்டி கணபதியைப் பிரதிஷ்டை செய்தனர். இன்றும் இக்கோயிலானது இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான மதராஸ் ரெஜிமெண்டின் மேற்பார்வையில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மோதகம், உண்ணியப்பம்
தினமும் காலையில் கோயில் நடை திறப்பதிலிருந்து, இரவு நடை சாத்தும் வரையில், ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைக்கப்படுவதும், அது உடையும் சத்தமும் காண்போரையும் கேட்போரையும் பரவசமடையச் செய்யும் நிகழ்வாகும். இதுவே இங்கு சிறப்புவழிபாடாகும். மேலும் மோதகம், உண்ணியப்பம் வைத்து வழிபடுவதும் சிறப்பாகும். இது தவிர, விநாயகர் சதுர்த்தி அன்று யானை பவனி வருவது வழக்கம். இவை தவிர, சிவராத்திரி மகரவிளக்கு, ஓணப் பண்டிகையும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். கடந்த ஜூலை ஏழாம் தேதி இந்தக் கோயிலுக்குச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.