

இராமாயணத்தின் தொடக்கத்தில் குணவான், வீர்யவான், வித்வான், பிரிய தர்சனன், ஆத்மவான், புத்திமான், நீதிமான், ஸ்ரீமான், புகழ்மிக்கவர், நல்லியல்புகள் கொண்டவர், அனைவராலும் நேசிக்கப்படுபவர் என்று இராமபிரான் அறிமுகப்படுத்தப்படுகிறார். வால்மீகி இராமாயணத்தின் தொடக்க அத்தியாயங்கள், வால்மீகி முனிவரைப் பற்றியும், அவருக்கு நாரதர் உபதேசித்த இராம குணங்களைப் பற்றியும், கிரௌஞ்சம் வீழ்வதைக் கண்ட அவருடைய வாயிலிருந்து வெளிப் போந்த ‘முதல்’ ஸ்லோகம் பற்றியும் கூறுகின்றன. இந்த அத்தியாயங்களை வால்மீகி முனிவரே இயற்றியிருக்க முடியாது; அவருடைய சீடர்கள் யாரேனும் சேர்த்திருக்கக் கூடும் (மகாபாரதத்தில், வியாசர் உரைத்ததை அவருடைய சீடர் வைசம்பாயனர் எடுத்து விளக்குகிறார்).
முனிவரின் வினாவும் அதற்கான நாரதரின் விளக்கமும் இங்குதான் காணப்படுகின்றன. ‘இவ்வுலகில் இப்போது யார் இருக்கிறார்கள்?’ – இப்படித்தான் வினா தொடங்குகிறது. என்னவாக இருக்கிறார்கள்? குணவான் – நற்குணங்கள் கொண்டவராக, வீர்யவான் – வீரம் மிக்கவராக, தர்மக்ஞ – அறத்தில் நிலைத்தவராக, க்ருதக்ஞ – நன்றி செறிந்தவராக, ஸத்யவாக்ய – உண்மையே உரைப்பவராக, த்ருடவ்ரத – உறுதியான கட்டுப்பாடு உடையவராக, சாரித்ரேண யுக்த – நன்னடத்தை உள்ளவராக, ஸர்வபூ தேஷு ஹித – அனைத்து உயிர்களுக்கும் நன்மைசெய்பவராக, வித்வான் – கல்வியில் சிறந்தவராக, ஸமர்த்த – செயல் திறன் நிறைந்தவராக, பிரிய தர்சனன் – அன்புப் பார்வை கொண்டவராக அல்லது பார்வைக்கு அழகானவராக, ஆத்மவான் – சுயக் கட்டுபாடு மிக்கவராக, ஜிதக்ரோத – சினத்தை வென்றவராக, த்யுதிமான் – ஒளி பொருந்தியவராக, அநஸூயக – பொறாமை இல்லாதவராக, பிப்யத தேவ – (தம்முடைய சினத்தால்) தேவர்களுக்கு நடுக்கத்தைத் தருபவராக – இருப்பவர் யார்? இப்படிப்பட்டவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.