

திருச்சி மாவட்டம் திருநாராயணபுரம் (வேதபுரி, தொட்டியம்) வேதநாராயண பெருமாள் கோயிலில் ஈசனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் திருமாலின் திருவடிகள் அமைந்துள்ளன. நான்கு வேதங்களையும் தலைக்கு அணைகளாகக் கொண்டு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டபடி நாபிக் கமலத்தில் இருக்கும் நான்முகனுக்கு வேத உபதேசம் செய்கிறார் திருமால். ஊரில் ஒருவருகொருவர் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், கோயில் முகப்பில் உள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன் பேசித் தீர்த்துக் கொள்வது வழக்கம்.
ஒருசமயம் தனது கர்வத்தால் தனது படைக்கும் தொழில் பதவியை இழந்தார் நான்முகன். அதன்பிறகு மீண்டும் உயிர்களைப் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மதேவன் திருமாலிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதன்படி வேதங்களை நான்முகனுக்கு உபதேசம் செய்யலானார். வேதங்களை உபதேசித்ததோடு மட்டுமல்லாமல் இங்கேயே பள்ளிகொண்டார். அதன் காரணமாக பெருமாளுக்கு வேதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது.