

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயில் ‘ஞானபீடம்’ என்றும் ‘தட்சிண திரிவேணி’ என்றும் புகழ் பெற்ற கோயில் ஆகும். இவ்வூர் சிவன் கோயிலில் துர்கையும், பெருமாள் கோயிலில் மகாலாட்சுமியும், தனி கோயிலில் சரஸ்வதியும் அருள்பாலிப்பதால் பக்தர்கள் முப்பெரும் தேவியரையும் ஒரே ஊரில் தரிசிக்கும் பேறு பெறுகின்றனர்.
சத்தியலோகத்தில் நான்முகனும், சரஸ்வதி தேவியும் தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி தேவி, தன்னால் மட்டுமே சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று நான்முகனிடம் கூறினார். மேலும் தான் கல்விக்கு அரசி என்றும் கூறினார். நான்முகனோ தான் படைப்புத் தொழில் செய்வதாலேயே சத்தியலோகம் பெருமை அடைகிறது என்றார். மேலும் தன் துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமை அடைகிறார் என்றும் கூறுகிறார்.