

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுயம்பு மூர்த்தியாக சிக்கல் (மல்லிகாரண்யம்) நவநீதேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 146-வது தேவாரத் தலம் ஆகும். காவிரி தென்கரைத் தலங்களில் இது 83-வது தலம். ஒரு முறை மழை பொய்த்து, பஞ்ச காலம் ஏற்பட்டபோது, பசியில் சிக்கித் தவித்த (விண்ணுலகத்தில் இருக்கும்) காமதேனு பசு, மாமிசத்தை உண்டுவிட்டது. இதை அறிந்த சிவபெருமான், பசுவை புலியாக மாற்றிவிட்டார்.
புலி ரூபத்தில் இருக்கும் பசு, சிவபெருமானிடம் மன்னிப்பு கோரியது. பூலோகத்தில் உள்ள மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள ஈசனை வழிபட்டால் சாபம் விலகும் என்று சிவபெருமான் கூறியதைக் கேட்ட காமதேனு, சிவபெருமானின் அறிவுரைப் படி மல்லிகாரண்யம் வந்த டைந்தது.