

திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் (கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர்) புருஷோத்தம பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3-வது திவ்ய தேசம் ஆகும். நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம். ஈசனைப் போலவே பிரம்மதேவனும் ஐந்து தலைகளுடன் இருந்தார். இருவருக்கும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணிய ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார்.
இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவனுடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. பசியால் வாடினார் ஈசன்.