

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்கள் முப்பத்தி இரண்டில் பனிரெண்டாவது தலமாக தக்கோலம் மாம்பழநாதர் கோயில் விளங்குகிறது. இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்கும், மழலைச் செல்வம் பெறுவதற்கும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நிலவளம், நீர்வளம் மிக்க செழிப்பான பகுதியாக விளங்கும் இத்தலம், ஞான சம்பந்தர், அப்பர், திருமாளிகைத்தேவர், திருமூலர் உள்ளிட்டஆன்றோர் பெருமக்களால் பாடப்பட்டுள்ளது.
கி.பி 2-ம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வருகை தந்த கிரேக்க நிலவியல் ஆசிரியர் தாலமி தன் பயணக் குறிப்பில் ‘தகோல’ என பெயரிட்டுச் சொன்ன இத்தலம் கூத்ரிய சிகாமணிபுரம், இரட்டபாடி கொண்ட சோழபுரம், பல்லவபுரம், வடி முடி கொண்ட சோழபுரம், கலிகை மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது.