

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் குருநாதருக்கு பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒப்பற்ற வழிகாட்டிகளாக ஆச்சாரிய பெருமக்கள் விளங்குகின்றனர். குருவருளால் திருவருளும், பூர்ண மன சாந்தியும், ஞானமும் கிட்டும் என்பதில் ஐயமில்லை. பகவான் ஈஸ்வரனால் அருளப்பட்ட வேதம்தான் நம்முடைய சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்துக்கு ஆணிவேர்.
முற்காலத்தில் ஒன்றாக இருந்த வேதத்தை, பின்னாளில் படிக்கவோ, ஞாபகப்படுத்தவோ முடியாத சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையில் ஸ்ரீமந் நாராயணனின் அம்சமாக அவதரித்த பகவான் வேத வியாசர், இறைவனின் திருவருளால், அவருக்கே இருந்த ஞானத்தால் வேத மந்திரங்களை நான்காகப் பிரித்து அவற்றை அவருடைய சீடர்களான நான்கு பேரிடம் முதலில் உபதேசித்தார்.