

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், திருவெண்காட்டில் உள்ள பிரம்மவித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயில், எட்டு திசையில் உள்ளவர்களையும் ஈர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. சமயக் குரவர்கள் நால்வராலும் பாடல்பெற்ற தலமாக விளங்கும் இத்தலம் புதனுக்கு உரிய தலமாக போற்றப்படுகிறது. திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, காசி எனப்படும் வாரணாசியில் இறக்க முக்தி என்பது புராண கூற்று. இவையனைத்தையும் ஒருங்கே தரும் தலம் திருவெண்காடு.
சுவேதன் என்னும் வடநாட்டு மன்னன் தரிசித்ததாலும் பெருங்காடாக இருந்ததாலும் வடமொழியில் சுவேதாரண்யம், தமிழில் திருவெண்காடு என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. தில்லையில் ஆடுவதற்குமுன் ஆடல்வல்லான் இவ்வூரில் ஆடியதால் ஆதி சிதம்பரமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது. உலக உயிர்கள் உய்வதற்காக சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் முதன்மையான ஒன்பது தாண்டவங்கள் ஆடிய தலங்களில் இதுவும் ஒன்று.