

‘நாம் எந்த வகையில் வாழ வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நம்மால் உடனடியாக அப்படி வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியாவிட்டால், அதற்காக நம்மனதில் குற்ற உணர்வு ஏற்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில் என்றாவது ஒரு நாள் அப்படி மாற்றிக் கொள்ள அருள வேண்டும் என்று அம்பாளிடம் அல்லது நம் இஷ்ட தெய்வத்திடம் தினமும் மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுவே நமக்கு நன்மையைத் தரும்’ என்பது காஞ்சி மகாஸ்வாமி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உபதேச மொழி ஆகும்.
காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளைத் தொகுத்து உரைக்கும் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் வாசிக்க இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இவர்களைப் போன்ற அன்பர்களுக்கு தெய்வத்தின் குரலை கொண்டு சேர்க்கும் விதமாக ‘தினசரி பெரியவா தியானம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பக்கம், ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு நற்சிந்தனை என்று இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.