

அனைவராலும் போற்றத்தக்க மதத் தலைவராக இருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கைச் சரித்திரத்தை விளக்கும் நூலாக ‘தி இந்து பதிப்பக குழுமம்’ வெளியிட்ட ‘உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி’ என்ற நூல் விளங்குகிறது. மகாஸ்வாமியின் 131-வது ஜெயந்தியை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நவீன காலத்திலும் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்தார். எளிமையைக் கடைபிடித்த மகாஸ்வாமியின் எண்ணங்கள், பகுத்தறிவு, உணர்திறன், கருணை ஆகியன உயர்ந்த இடத்தில் உள்ளன. அனைத்து தரப்பு மக்களிடையே நல்லிணக்கம், எளிமையாக வாழ்தல், ஏழைகள் மீது கருணை போன்ற லட்சியங்கள்; கடுமையான பேச்சைத் தவிர்த்தல், பிற மதங்கள் மீது துவேஷம் இல்லாமை, அவரவர் விருப்பப்படி பிற மதங்களைப் பின்பற்ற அனுமதிப்பது ஆகியன இன்றும் மிகப் பொருத்தமாக உள்ளது.