

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், அனைத்து செல்வங்களையும் அருளும் தலமாக போற்றப்படுகிறது. வேலவனே தீர்மானித்ததால், இத்தலத்தில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருகாலத்தில் மௌஞ்சாரண்யம் என்று அழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் மீஞ்சூர் என்று அழைக்கப்படுகிறது. தர்ப்பைப் புற்கள் அடர்ந்த வனப்பகுதியாக விளங்கும் இவ்வூரில் (வடகாஞ்சி) காஞ்சியைப் போலவே ஏகாம்பரநாதரும், காமாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
நகரின் மையப்பகுதியில் அமைந்த ஏகாம்பரநாதர் கோயில், 5 நிலை ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. தொடக்க காலத்தில் இருந்தே முருகன் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவாக வைகாசி விசாகத்திருவிழா உள்ளது. தெற்கு சுற்றில் வள்ளி - தெய்வானை உடனுறை முருகனுக்கு தனி கோயில் அமைந்துள்ளது.