திருமண வரம் அருளும் கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், செவ்வாய் தோஷம் போக்கும் தலமாக போற்றப்படுகிறது. திருமணத் தடை நீக்கி, அனைத்து நலன்களையும் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்தில், பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் பூலோக ப்ரதிக்ச விவாஹம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஈசனும் சக்தியும் மணந்து கொண்ட திருமணத் தலங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
திருமணக் கோலம் காட்டிய திருத்தலங்கள் (காசி விவாஹம்) - வேதாரண்யம், திருவேற்காடு, காஞ்சி. காந்தர்வ முறைப்படி ஈசனும் சக்தியும் மணந்து கொண்ட இடங்கள் (காந்தர்வ விவாஹம்) - உத்திரகோசமங்கை, திருவீழிமிழலை. வாக்கு தந்தபடி ஈசன் அன்னையை கரம் பிடித்த தலங்கள் (ப்ரதிக்ஞா விவாஹம்) - மதுரை, குற்றாலம். விளையாட்டாக பந்தாடி பார்வதியை ஈசன் மணந்த தலம் (ஹாஸ்ய விவாஹம்) - பந்தநல்லூர். முறைப்படி அனைவரும் புடைசூழ செய்து கொண்ட திருமணம் (பூலோக ப்ரதிக்ச விவாஹம்) - திருமணஞ்சேரி, கயிலாயம், திருவாரூர், கொருமடுவு.
